தொழிலாளி கொலை வழக்கில் நண்பர்கள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை; சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு
ெதாழிலாளி கொலை வழக்கில் நண்பர்கள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
சிவமொக்கா:
தொழிலாளி கொலை
சிவமொக்கா பாபுஜிநகரை சேர்ந்தவர் ராஜூ (வயது 36). இவரது நண்பர்கள் குத்தியப்பா காலனியை சேர்ந்த ஜெயப்பா (42), அசோக் தெருவை சேர்ந்த வாசு (42). இவர்கள் கூலி தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில், ஜெயப்பாவும், வாசுவும் மது அருந்த ராஜூவிடம் பணம் கேட்டுள்ளனர். ஆனால் ராஜூ பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து ராஜூ அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த நிலையில், சிவமொக்கா சாகர் சாலையில் மதுபான விடுதி அருகே உள்ள கூடாரத்தில் ராஜூ படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜெயப்பாவும், வாசுவும் சேர்ந்து ராஜூ தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ந்தேதி நடந்தது.
ஆயுள் தண்டனை
இதுகுறித்து சிவமொக்கா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஜெயப்பா மற்றும் வாசுவை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சிவமொக்கா கோர்ட்டில் நடந்து வந்தது. மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக சிவமொக்கா புறநகர் போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று முன்தினம் நீதிபதி மானு தீர்ப்பு வழங்கினார். இதில், ஜெயப்பா மற்றும் வாசு மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.