நாம் அனைவரும் இணைந்து வளமான கர்நாடகத்தை உருவாக்குவோம்; கவர்னர் தாவர்சந்த் கெலாட் வேண்டுகோள்
நாம் அனைவரும் இணைந்து வளமான கர்நாடகத்தை உருவாக்குவோம் என்று கவர்னர் தாவர்சந்த் கெலாட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேசியதாவது:-
பெண்கள் கிளினிக்குகள்
நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரத்து 66 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பூஜ்ஜிய வட்டியில் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
தேசிய சுகாதார மிஷன் திட்டத்தில் பிரசவத்தின்போது கர்ப்பிணி பெண்கள் இறப்பது 83-ல் இருந்து 69.438 ஆக குறைந்துள்ளது. நகரங்களில் 128 பெண்கள் நல கிளினிக்குகள் தொடங்கப்படும். 100 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கைகள் கொண்ட சமுதாய மையங்களாக தரம் உயர்த்தப்படுகிறது. இதற்கு ரூ.1,000 கோடி செலவு செய்யப்படுகிறது.
மின்சார வாகனங்கள்
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள புதுமைகளை புகுத்தும் மாநிலங்களின் தர பட்டியலில் கர்நாடகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. புத்தொழில் நிறுவனங்களிலும் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. புத்தொழில் நிறுவனங்கள் கொள்கை, ஆராய்ச்சி-வளர்ச்சி கொள்கை, கர்நாடக தரவுகள் மைய கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. வணிக பொருட்கள் ஏற்றுமதியில் கர்நாடகத்தில் பங்கு 25.87 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். ஏற்றுதியில் கர்நாடகம் முதல் 4 இடங்களில் உள்ளது.
சமீபத்தில் நடத்தப்பட்ட தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 9.81 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய முன்வரும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க அதற்கான மின்சார கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இடஒதுக்கீடு அதிகரிப்பு
கர்நாடகத்தில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிட சமூகத்திற்கு இட ஒதுக்கீடு 15 சதவீதத்தில் இருந்து 17 ஆகவும், பழங்குடியினருக்கு 3-ல் இருந்து 7 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவி குழுக்களை அமைப்பதில் 25 சதவீதம் ஆதிதிராவிடர், பழங்குயினர் பெண்களுக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் வளர்ச்சி வாரிய திட்டங்களிலும் அந்த சமூக பெண்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கப்படும். நடப்பு ஆண்டில் 1.89 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு விடுதிகளில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
சுய வேலைவாய்ப்பு
ஆதிதிராவிடர் மாணவர்களுக்காக 100 அம்பேத்கர் விடுதிகள், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக கனகதாசர் பெயரில் 50 விடுதிகள் அமைக்கப்படும். நில உரிமை திட்டத்தின் கீழ் நிலமற்ற
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்படும் உதவித்தொகை ஏக்கருக்கு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பல்வேறு வீட்டு வசதி திட்டங்களில் அந்த சமூக மக்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.2 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 11 ஆயிரத்து 133 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். கிராமங்களில் கிராம ஒன் மையம் திறக்கப்பட்டுள்ளது.
சேவா சிந்து
சேவா சிந்து திட்டத்தின் மூலம் 80 துறைகளின் 850 அரசு சேவைகள் வழங்கப்படுகின்றன. நிர்வாகத்தில் சிறப்பாக செயல்படும் சேவா சிந்து சேவைக்கு பிரதமரின் விருது கிடைத்துள்ளது. அடுத்த 25 ஆண்டுகள் பொற்காலம் தான். இந்த காலக்கட்டத்தில் வளா்ந்த இந்தியாவை உருவாக்குவது ஒவ்வொருவரின் கடமை ஆகும். நமது நாட்டின் வளர்ச்சிக்கு ஒவ்வொருவரும் பங்களிப்பு அளிக்க வேண்டும். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் ஒவ்வொருவரையும் ஊக்குவிக்க வேண்டும்.
நாம் அனைவரும் இணைந்து சுகாதாரமான, வளமான கர்நாடகத்தை உருவாக்குவோம். நமது நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, வளத்தை பலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு தாவர்சந்த் கெலாட் பேசினார்.