ஜம்மு-காஷ்மீர் நரகத்திற்கு செல்லட்டும்... சர்ச்சை பேச்சுக்கு பரூக் அப்துல்லா விளக்கம்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் சொர்க்கத்திற்காக என்ன செய்யப்பட்டு உள்ளது என கூறுங்கள் பார்க்கலாம்? என அவர் கேள்வி எழுப்பினார்.
புதுடெல்லி,
ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டில் ரத்து செய்யப்பட்டது. இதன்பின்னர், லடாக் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிரான வழக்கு விசாரணை 4 ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு நேற்று வழங்கியது.
இதன்படி, சிறப்பு அந்தஸ்து ரத்து என்ற மத்திய அரசின் முடிவு செல்லும் என்று தீர்ப்பளித்தது. இந்த முடிவு பற்றிய கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா, அவருடைய எரிச்சல் உணர்வை வெளிப்படுத்தினார். ஜம்மு-காஷ்மீர் நரகத்திற்கு செல்லட்டும் என கூறினார்.
இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனை தொடர்ந்து அவருடைய பேச்சுக்கு பரூக் அப்துல்லா விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறும்போது, உண்மையில் நீங்கள் அதனை நரகத்திற்கு எடுத்து சென்று இருக்கிறீர்கள். சொர்க்கத்திற்கான எந்த விசயமும் செய்யப்படவில்லை.
சொர்க்கத்திற்காக என்ன செய்யப்பட்டு உள்ளது என கூறுங்கள் பார்க்கலாம்? ஒவ்வோர் இடத்திலும் தேர்தல் நடைபெறுகிறது. ஆனால், காஷ்மீரில் தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு எங்களுடைய தவறென்ன? வேறெந்த மாநிலம் ஒரு யூனியன் பிரதேசம் ஆக உருமாற்றப்பட்டு உள்ளது? நீங்கள் அதனை நரகம் ஆக்கவில்லையா? என கேள்விகளை அடுக்கினார்.
தொடர்ந்து பரூக் அப்துல்லா கூறும்போது, அவருடைய தேசிய மாநாட்டு கட்சியானது, வேறெந்த நாட்டின் கருத்துடனும் ஒத்து போகாது என கூறியதுடன், காஷ்மீர் மக்கள் மீது மத்திய அரசு மதிப்பு வைக்க வேண்டும். அவர்களுடைய ஆதரவை வெற்றி கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.