போஸ்டர்கள் ஒட்டியவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை; போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி பேட்டி

போஸ்டர் ஒட்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கண்காணிப்பு கேமரா மூலம் தேடும் பணி நடப்பதாகவும் போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-21 18:45 GMT

பெங்களூரு:

முதல்-மந்திரிக்கு எதிராக போஸ்டர்

40 சதவீத கமிஷன் விவகாரத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு எதிராக பெங்களூரு நகர் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் 'பே-சி.எம்.' என்ற பெயரில் பசவராஜ் பொம்மை படம் அடங்கிய 'கியூ.ஆர்.' கோடு போஸ்டரை ஒட்டி உள்ளனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூருவில் நேற்று போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

சட்டப்படி நடவடிக்கை

பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் போஸ்டா்கள் ஒட்டப்பட்டு இருக்கிறது. போஸ்டர்கள் ஒட்டிய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எந்தெந்த பகுதிகளில் போஸ்டா்கள் ஒட்டப்பட்டு இருக்கிறது என்பதை கண்காணித்து அறிக்கை அளிக்கும்படி துணை போலீஸ் கமிஷனர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். எந்த பகுதிகளில் எல்லாம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கிறதோ, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளேன்.

துணை போலீஸ் கமிஷனர்கள் அளிக்கும் அறிக்கையின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி அதிகாாிகள் அளித்த புகார்களின் அடிப்படையில் ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. போஸ்டர்கள் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி முதல்-மந்திரி உத்தரவிட்டு இருப்பது பற்றி எதுவும் தெரிவிக்க இயலாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்