தொடர் கனமழையால் ஆகும்பே மலைப்பாதையில் மண் சரிவு; மந்திரி அரக ஞானேந்திரா நேரில் ஆய்வு
சிவமொக்கா மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் ஆகும்பே மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்தை மந்திரி அரக ஞானேந்திரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிவமொக்கா;
மண்சரிவு
கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக மலைநாடு மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. மண்சரிவு ஏற்பட்டு வாகன போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டது.
தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சிவமொக்காவில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
அதாவது சிவமொக்காவில் இருந்து மங்களூரு செல்லும் ஆகும்பே மலைப்பாதையில் உள்ள எண் 11 மற்றும் 12 ஆகிய கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் உடுப்பி, மங்களூரு, கேரளாவிற்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவாகி இருக்கிறது.
மந்திரி ஆய்வு
இந்த மண் சரிவை போலீஸ் மந்திரியும், மாவட்ட பொறுப்பு மந்திரியுமான அரக ஞானேந்திரா நேரில் பார்வையிட்டார். அப்போது மாவட்ட கலெக்டரை அழைத்த மந்திரி, உடனே மண் சரிவை சரி செய்து சாலை போக்குவரத்திற்கு வழிவகை செய்யும்படி உத்தரவிட்டார்.
இதை ஏற்ற கலெக்டர் செல்வமணி, மாநகராட்சி ஊழியர்களை அழைத்து பொக்லைன் உதவியுடன் கற்கள் மற்றும் மணலை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து கலெக்டர் செல்வமணி கூறும்போது:-
மண் சரிவால் உடுப்பி மாவட்டம் மணிப்பாலுக்கு செல்ல இருந்த வாகனங்கள் ஒசநகர், பைந்தூர் வழியாக மாற்றிவிடப்பட்டுள்ளது. இதேபோல மங்களூரு, கேரளாவிற்கு செல்லும் வாகனங்களும் மாற்று பாதை வழியாக இயக்கப்பட்டு வருகிறது. மேலும் மண் சரிவு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.