ரெயில்வே வேலைக்கு லஞ்சமாக நிலம்: லாலு பிரசாத் யாதவிடம் சி.பி.ஐ. கிடுக்கிப்பிடி விசாரணை
ரெயில்வேயில் வேலை வழங்கிவிட்டு லஞ்சமாக நிலங்களைப் பெற்றதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் லாலு பிரசாத் யாதவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.
புதுடெல்லி,
மத்தியில் மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, 2004-2009 காலகட்டத்தில் ரெயில்வே மந்திரி பதவி வகித்தவர் ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் (வயது 74). அப்போது பீகாரைச் சேர்ந்த பலருக்கு லாலு பிரசாத் யாதவ், ரெயில்வே வேலை தந்து விட்டு, அதற்கு லஞ்சமாக நிலங்களை எழுதி வாங்கி தன் குடும்பத்தினர் பெயரிலும், ஏ.கே.இன்போசிஸ்டம் என்ற தனியார் நிறுவனத்தின் பெயரிலும் பதிவு செய்துகொண்டதாக புகார் எழுந்தது.
சி.பி.ஐ. வழக்குப்பதிவு
இது தொடர்பாக லாலுபிரசாத் யாதவ், அவருடைய மனைவியும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான ராப்ரிதேவி, இளைய மகனும், துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ், மகள் மிசா பாரதி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி மற்றும் 14 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்து விட்டது.
ராப்ரி தேவியிடம் விசாரணை
இந்த நிலையில் இவ்வழக்கில் பாட்னாவில் உள்ள லாலு பிரசாத் யாதவ் இல்லத்துக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் நேரில் சென்று ராப்ரி தேவியிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை 5 மணி நேரம் நீடித்தது.
இந்த விசாரணை பற்றி அவரது மகனும், துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் கருத்து தெரிவிக்கையில், "விசாரணை அமைப்புகள், பா.ஜ.க.வின் அரசியல் எதிரிகளுக்கு எதிராக செயல்படுகின்றன. அந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள ஒப்புக்கொள்கிறவர்களுக்கு உதவுகின்றன. இது வெளிப்படையான ரகசியம் ஆகும்" என தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கருத்து தெரிவிக்கையில், "இன்று ராப்ரி தேவி துன்புறுத்தப்படுகிறார், லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைவணங்காததால் பல ஆண்டுகளாக துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்" என குறிப்பிட்டார்.
ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால், "எதிர்க்கட்சி தலைவர்களைக் குறிவைத்து, துன்புறுத்துவது தவறானது" என குறிப்பிட்டார்.
லாலுவிடம் கிடுக்கிப்பிடி
இந்த நிலையில் சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு, நாடு திரும்பி, டெல்லியில் இந்தியா கேட் அருகில் உள்ள பண்டாரா பார்க்கில் அமைந்துள்ள மகள் மிசா பாரதி இல்லத்தில் ஓய்வில் இருந்து வருகிற லாலு பிரசாத் யாதவை விசாரிக்கவும் சி.பி.ஐ. முடிவு செய்தது.
இதற்காக நேற்று காலை 10.40 மணிக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் 2 கார்களில் அங்கு சென்றனர்.
எறத்தாழ 2 மணி நேரம் லாலு பிரசாத் யாதவிடம் சில ஆவணங்களைக் காட்டி கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கிருந்து 12.55 மணிக்கு புறப்பட்டுச்சென்றனர்.
வீடியோ பதிவு
லாலு பிரசாத் யாதவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.