பெங்களூருவில் ஆக்கிரமிப்பின் பிடியில் ஏரிகள்...! ; சமூக ஆர்வலர்கள்- பொதுமக்கள் கருத்து என்ன?
பெங்களூருவில் ஏரிகள், ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெங்களூரு:
நீர்நிலைகள் அவசியம்
வருண பகவான் வழங்கும் மழைநீரை சேமித்து வைக்க நீர்நிலைகள் அவசியம். அந்த நீர்நிலைகளை ஆதிகாலத்திலேயே அதாவது 1,000 ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் உருவாக்கினார்கள். அதாவது அதிக மழை பெய்து அந்த நீர் ஓர் இடத்தில் வந்து சேர்ந்து தேங்கி நிற்கும். அவ்வாறு இயற்கையாகவே நீர் நிலைகள் உருவாகின. அவ்வாறு உருவாகிய நீர்நிலைகளை முறைப்படுத்தி, செம்மைப்படுத்தி நமது முன்னோர்கள் வைத்தனர். அதனால் தான் ஒவ்வொரு கிராமத்திலும் ஏரிகள் இருக்கும். ஏரிகள் இல்லாத கிராமத்தை பார்ப்பது அரிது.
அதேபோல் காலப்போக்கில் கிராமங்கள் நகரங்களாக மாறும்போது, ஏரிகள் நகரின் மையப்பகுதிக்கு வந்துவிடும். நகரம் வளர்ச்சி அடையும்போது நிலத்தின் மதிப்பு அதிகரித்து விடுகிறது. அவ்வாறான சூழ்நிலையில் ஏரிகளை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டி விடுகிறார்கள். கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூருவில் அதிகப்படியான ஏரிகள் இருந்தன. ஏரிக்கு பெயர் போன நகரம் பெங்களூரு. அத்தகைய பெங்களூருவில் ஏரிகள் இன்று மோசமான நிலையில் உள்ளன.
ஏரிகள் அழிக்கப்பட்டது
பெங்களூரு நகரை நிர்மாணித்தவர் கெம்பேகவுடா. 500 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளை அவர் ஆட்சி செய்தார். அவரது ஆட்சியில் ஏரிகள் உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன. ஒவ்வொரு சமூகத்திற்கும் பேட்டையை(நகர்) உருவாக்கினார். அதனால் பெங்களூருவில் சிக்பேட்டை, திகழர்பேட்டை, வண்ணாரப்பேட்டை என பேட்டை பெயர் இடம் பெற்றுள்ளது. அப்போது இருந்த 'பெந்தகாளூர்' காலப்போக்கில் மருகி 'பெங்களூரு' என்று பெயர் மாற்றம் அடைந்துள்ளது.
பெங்களூரு நகரை கெம்பேகவுடா தொலைநோக்கு பார்வையுடன் கட்டமைத்தார். ஏரிகள் மற்றும் பூங்காக்களை அமைத்து அவற்றை பாதுகாத்தார். அருகில் பெரிய அணைகளோ அல்லது ஆறுகளோ இல்லாத காரணத்தால் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள நீர் நிலைகளை உருவாக்கினார். பெங்களூருவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள் இருந்தன. ஆனால் நகரம் வேகமாக வளரத்தொடங்கியதை அடுத்து ஏரிகள் ஒவ்வொன்றாக அழிக்கப்பட்டது.
கழிவுநீர்
ஏன் ஆட்சியாளர்களே ஏரிகளை அழித்து பஸ் நிலையம், வணிக வளாகம், குடியிருப்பு பகுதிகளை உருவாக்கினர். அவ்வாறு 40-க்கும் மேற்பட்ட ஏரிகள் குடியிருப்பு பகுதிகளாக மாறின. மெஜஸ்டிக் பி.எம்.டி.சி., கே.எஸ்.ஆர்.டி.சி. ஆகிய பஸ் நிலையங்கள் இருக்கும் பகுதி முன்பு ஏரியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பெங்களூருவில் கடந்த 2016-ம் ஆண்டு ஆய்வின்படி 106 ஏரிகள் இருந்தன. அவற்றில் 98 சதவீதம் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் ஏரிகளில் கழிவுநீர் கலந்து அவற்றின் நிலை மோசமாக இருந்தது.
தற்போதைய நிலையில் 17 ஏரிகள் மட்டுமே நல்ல பராமரிப்புடன் ஆரோக்கியமான சூழலில் உள்ளதாக கூறப்படுகிறது. பெங்களூருவில் 1976-ம் ஆண்டு வரை ஏரிகள் அரசு துறைகளால் நிர்வகிக்கப்பட்டன. இந்த ஏரிகளை பாதுகாப்பது குறித்து ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தனது அறிக்கையை அரசுக்கு வழங்கியது. 127 ஏரிகள் இருந்ததாகவும், அவற்றில் 90 ஏரிகளை வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நகரவாசிகள் எதிர்ப்பு
கர்நாடக அரசு கடந்த 2002-ம் ஆண்டு ஏரிகள் மேம்பாட்டு ஆணையத்தை அமைத்தது. ஆனால் அந்த ஆணையத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு வழங்கப்படாததால், ஏரிகளை நிர்வகிக்கும் பணி தனியாருக்கு வழங்கப்பட்டது. முதல் கட்டமாக 5 ஏரிகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதற்கு நகரவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மாநில அரசு ஏரிகளை தனியாருக்கு விடும் முடிவை கைவிட்டது.
கர்நாடக அரசு கடந்த 2014-ம் ஆண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த கே.பி.கோலிவாட் தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஏரிகளின் நிலை குறித்து ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டது. பெங்களூருவில் உள்ள ஏரிகளில் 10 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாக அந்த குழு தனது அறிக்கையில் கூறியது. இது நகர மற்றும் கிராமப்புற ஏரிகளில் தான் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
தனியார் நிறுவனங்கள்
20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் சில அரசு துறைகளில் ஏரிகளை ஆக்கிரமித்து இருப்பதாக அந்த குழு அரசுக்கு, தகவல் தெரிவித்தது. அது மட்டுமின்றி 140 மத அமைப்புகளும் ஏரி நிலங்களை ஆக்கிரமித்து இருப்பதாக அந்த குழு கூறியது. பெங்களூருவில் 1973-ம் ஆண்டு நீர்நிலைகளின் பரப்பு 3.40 சதவீதத்தில் இருந்து 1.47 சதவீதமாக குறைந்துவிட்டதாக இந்திய அறிவியல் கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.
பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குள் தற்போது 211 ஏரிகள் உள்ளதாக கடந்த 2020-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது முக்கியமான பெரிய ஏரிகள் ஆகும். இது தவிர சிறிய அளவிலான ஏரிகளும் உள்ளன. இந்த ஏரிகளில் உள்ள நீர் குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதால் மழை காலங்களில் மழைநீர் குடியிருப்பு கட்டிடங்களுக்குள் புகுந்து பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஏரி-கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் சமீபத்தில் பெங்களூருவில் பெய்த கனமழை காரணமாக பல குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கின. அதனால் பெங்களூருவில் ஏரி-கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆக்கிரமிப்புகள் இதுகுறித்து சமூக ஆர்வலர் ராமச்சந்திரன் கூறுகையில், 'பெங்களூருவில் நிறைய ஏரிகள் இருந்தன. நகரமயமாதல் காரணமாக பல ஏரிகள் காணாமல் போய்விட்டன. தற்போது செயல்பாட்டில் இருக்கும் ஏரிகளும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரிகளை பாதுகாக்க அவற்றை சுற்றிலும் வேலி போட வேண்டும். ஏரி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எந்த விதமான நிவாரணமும் வழங்க கூடாது. ஏரிகள் ஆக்கிரப்பால் தான் இன்று பெங்களூருவில் கனமழை பெய்தால் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்' என்றார்.
இதுகுறித்து கோரமங்களா பகுதியை சேர்ந்த சுதாநந்தன், 'பெங்களூருவில் அதிக எண்ணிக்கையில் ஏரிகள் இருந்தன. ஆக்கிரப்பு காரணமாக ஏரிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. பல ஏரிகள் காணாமல் போய்விட்டன. இருக்கும் ஏரிகளின் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டியுள்ளனர். அத்தகைய கட்டிடங்களை இடித்து தள்ள வேண்டும். ஏரிகளை பாதுகாக்க வேண்டும். ஏரிகள் அழிக்கப்பட்டால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிடும். பெங்களூருவில் ஏற்கனவே நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது' என்றார்.
கடும் நடவடிக்கை
பெங்களூரு எல்.ஆர்.நகரை சேர்ந்த அமுதா கூறும்போது, 'பெங்களூருவில் ஏரிகள் அதிகமாக இருந்தன. நகரம் வேகமாக வளர்ச்சி அடைந்த காரணத்தால் ஏரிகளை அழித்துவிட்டனர். தற்போது உள்ள ஏரி நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிகளில் கட்டிடங்களை கட்டி இருப்பதால் மழை காலத்தில் குடியிருப்பு கட்டிடங்களுக்குள் மழைநீர் புகுந்து பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது' என்றார்.
சோழர்கள் அமைத்த பெல்லந்தூர் ஏரி
பெங்களூருவில் பெரிய ஏரிகளில் முக்கியமானது பெல்லந்தூர் ஏரி. இந்த ஏரி, சோழர்கள் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பரப்பு 891 ஏக்கர் ஆகும். ஆனால் ஆக்கிரமிப்பு காரணமாக இதன் பரப்பு 797 ஆக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது நகருக்கு வெளியே அமைந்துள்ளது. இந்த ஏரியில் ரசாயன கழிவுகள் கலந்து ஒரு விதமான வெள்ளை நுரை உருவாகி அருகில் வசிக்கும் மக்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தி வந்தது.
இதுகுறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து, பெல்லந்தூர் ஏரியில் ரசாயன கழிவு நீர் கலப்பதை தடுக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி மாநில அரசு ரசாயன கழிவு நீர் கலப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது. அந்த ஏரியில் அடிக்கடி தீப்பிடித்து எரியும் சம்பவங்களும் நடைபெற்று வந்தது. அந்த ஏரிக்கு வரும் கழிவுநீரை சுத்திகரித்து ஏரியில் விட ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஏரியின் அருகே அமைக்கப்பட்டது. அந்த ஏரியின் மேல் பகுதியில் இருந்த சிறிய ஏரிகள் அழிந்துவிட்டன.
ஏரிகளை ஆக்கிரமிப்போருக்கு தண்டனை நிச்சயம்
ஏரிகள் ஆக்கிரமிப்பு குறித்து சமூக ஆர்வலரும், அரசு நில ஆக்கிரமிப்பு, முறைகேடுகளுக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்தி வருபவருமான டி.ஜே.ஆபிரகாமிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
" பெங்களூருவில் ஏரி நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அரசியல்வாதிகள், ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறவர்கள் தான் அதிகம் ஆக்கிரமித்துள்ளனர். இது மட்டுமின்றி அரசியல்வாதிகள் குடிசை வாழ் மக்களை குடியமர்த்தும் நோக்கத்தில் ஏரி நிலங்களை ஆக்கிரமித்து கொள்கிறார்கள். அந்த நிலத்தில் குடிசைகளை அமைத்து அந்த மக்களை குடியேற அனுமதிக்கிறார்கள். இதன் மூலம் அவர்களின் ஓட்டுகளை தங்கள் பக்கம் வைத்து கொள்கிறார்கள். இவற்றின் காரணமாக தான் பெங்களூருவில் மழை பெய்யும்போது, வெள்ளம் ஏற்பட்டு குடியிருப்பு கட்டிடங்களுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இவற்றுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நில முறைகேடுகள் மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிராக நான் பல்வேறு வழக்குகளை தொடுத்துள்ளேன். அந்த வழக்குகள் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்குகள் நிறைவடைய காலம் ஆகும். நில முறைகேடு வழக்கில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, கனிம வள முறைகேட்டில் முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி உள்ளிட்டோர் சிறைக்கு சென்றனர். பீகாரில் முறைகேடுகள் செய்த லாலுபிரசாத் யாதவ் சிறைக்கு செல்லவில்லையா?. அதனால் ஏரிகள் ஆக்கிரமிப்பு மற்றும் அரசு நில முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை நிச்சயம் கிடைக்கும்."
இவ்வாறு டி.ஜே.ஆபிரகாம் கூறினார்.
பெங்களூருவில் மாயமான ஏரிகளும்... அதன் தற்போதைய நிலையும்....
சல்லகட்டா ஏரி - கோல்ப் மைதானம்
தர்மாம்புதி ஏரி - மெஜஸ்டிக் பஸ் நிலையம்
கோரமங்களா ஏரி - குடியிருப்பு பகுதி
சித்திகட்டே ஏரி - கே.ஆர்.மார்க்கெட்
கரஞ்சி ஏரி - காந்தி பஜார் பகுதி
நாகசெட்டிஹள்ளி ஏரி - குடியிருப்பு பகுதி
காடுகொண்டனஹள்ளி ஏரி - அம்பேத்கர் மருத்துவ கல்லூரி
டொம்ளூர் ஏரி - மின்சார நிறுவனம்
மில்லர்ஸ் ஏரி - குடியிருப்பு பகுதி, ஆஸ்பத்திரி
புட்டேனஹள்ளி ஏரி - ஜே.பி.நகர் 6-வது பேஸ்
ஜக்கராயன ஏரி - விளையாட்டு மைதானம்
சம்பங்கி ஏரி - கன்டீரவா விளையாட்டு மைதானம்
சூலே ஏரி - பெங்களூரு கால்பந்து மைதானம்
அக்கிதிம்மனஹள்ளி - பெங்களூரு ஆக்கி மைதானம்
காமாட்சிபாளையா ஏரி - விளையாட்டு மைதானம்
தாசரஹள்ளி ஏரி - டாக்டர் அம்பேத்கர் விளையாட்டு மைதானம்
வெங்கட்டராயன ஏரி - விளையாட்டு மைதானம்
பரங்கிபாளையா ஏரி - எச்.எஸ்.ஆர். லே-அவுட்
சனேகுருவனஹள்ளி ஏரி - கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக கட்டிடம்
187 ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை
ஐ.ஏ.எஸ். அதிகாரியான பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் (ஏரிகள், தோட்டக்கலை, கல்வி, நலத்திட்டம்) ராம்பிரசாத் மனோகர் கூறியதாவது:-
" பெங்களூருவில் தற்போது மொத்தம் 206 ஏரிகள் உள்ளன. அதில் 21 ஏரிகளில் எந்த விதமான ஆக்கிரமிப்புகளும் இல்லை. அந்த ஏரிகளுக்கு கம்பி வேலிகளை போட்டு பாதுகாத்து உள்ளோம். 187 ஏரிகளின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஏற்கனவே நில அளவீடு செய்யப்பட்டு அறிக்கை தயாராக உள்ளது. அந்த அறிக்கை அடிப்படையில் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு என்றே தாசில்தார்களை நியமிக்குமாறு கோரினேன். எனது கோரிக்கையை ஏற்று கர்நாடக அரசு 2 தாசில்தார்களை நியமித்துள்ளது. அவர்களை வைத்து நில அளவீடுகளை மேற்கொண்டு ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆக்கிரமிப்புகளை அடுத்த 6 மாதங்களில் அகற்ற வேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம். எந்தவித பாரபட்சமும் இன்றி ஆக்கிரமிப்புகளை அகற்றுவோம்.
நாங்கள் விரைவில் இந்த பணிகளை தொடங்க இருக்கிறோம். ஏரிகளை பாதுகாக்க வேண்டும் என்பது தான் மாநகராட்சியின் நோக்கம். ஆக்கிரமிப்புகளை அகற்றியதும், அந்த ஏரிகளை மேம்படுத்தி அவற்றுக்கு கம்பி வேலி போட்டு பாதுகாக்கப்படும். ஏரிகளை பாதுகாத்தால் தான் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க முடியும். நிலத்தடி நீர் மட்டம் போதிய அளவுக்கு இல்லை என்றால் நமக்கு அவசர காலங்களில் தண்ணீர் கிடைக்காது."
இவ்வாறு ராம்பிரசாத் மனோகர் கூறினார்.