மூதாட்டியை கொலை செய்த தொழிலாளி கைது
தார்வாரில் மூதாட்டியை கொலை செய்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
உப்பள்ளி:-
தார்வார் மாவட்டம் கல்கட்டகி தாலுகா ஆலதகட்டி கிராமத்தை சேர்ந்தவர் தியாமண்ணா. இவருக்கு சொந்தமான கரும்பு தோட்டம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இந்த கரும்பு தோட்டத்தில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார். இதை பார்த்த கூலி தொழிலாளிகள் கல்கட்டகி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அந்த விசாரணையில் மூதாட்டி நெல்லிகரவி கிராமத்தை சேர்ந்த திப்பவ்வா தம்பூரி (வயது 82) என்று தெரியவந்தது. யாரோ மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கொலையாளியை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நெல்லிகரவி கிராமத்தை சேர்ந்த மல்லப்பா (54) என்ற கூலி தொழிலாளி மீது சந்தேகம் எழுந்தது. நேற்று முன்தினம் மல்லப்பாவை மடக்கி பிடித்து விசாரித்தபோது, மூதாட்டியை கொலை செய்ததை ஒப்பு கொண்டார். அதாவது மூதாட்டியிடம் மல்லப்பா ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். அந்த பணத்தை மூதாட்டி திரும்ப கேட்டார். இதில் கோபமடைந்த மல்லப்பா, மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொலை செய்து, கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்து கொண்டார். பின்னர் உடலை தியாமண்ணாவின் கரும்பு தோட்டத்தில் வீசி சென்றதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து மல்லப்பாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.