அரிசிகெரே தொகுதியில் சிவலிங்கேகவுடாவிற்கு மாற்றாக காங்கிரஸ் பிரமுகர் சசிதர் போட்டி
சிவலிங்கேகவுடாவிற்கு மாற்றாக காங்கிரஸ் பிரமுகர் சசிதரை களம் இறக்க முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அரிசிகெரே தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஹாசன்:
சிவலிங்கேகவுடாவிற்கு மாற்றாக காங்கிரஸ் பிரமுகர் சசிதரை களம் இறக்க முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அரிசிகெரே தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவலிங்கேகவுடா விலகல்
ஹாசன் தொகுதியில் ரேவண்ணாவின் மனைவி பவானி ரேவண்ணாவை நிறுத்தவேண்டும் என்று அவரது கணவர் விரும்பினார். ஆனால் குமாரசாமிக்கு இதில் உடன் பாடு இல்லை. தனது ஆதரவாளரான சொரூப் என்பவரை வேட்பாளராக நிறுத்த குமாரசாமி விரும்பினார். இதனால் இந்த விவகாரம் குடும்ப பிரச்சினையாக மாறியது. கட்சியில் பிளவு ஏற்படும் சூழ்நிலை உருவானது. இறுதியில் சகோதரனனின் பிடிவாதத்திற்கு, ரேவண்ணா சரணடைந்தார். குமாரசாமியை இறுதி முடிவு எடுப்பார் என்று கூறினார்.
அதன்படி குமாரசாமி தனது ஆதரவாளரான சொரூப்பை வேட்பாளராக நிறுத்த போவதாக அறிவித்தார். இதையடுத்து இந்த பிரச்சினை முடிக்கு வந்தது. இதையடுத்து புதிய பிரச்சினையாக, அரிசிகெரே தொகுதி எம்.எல்.ஏ.சிவலிங்கேவுடா ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இருந்து விலகுவதாக திடீர் தகவல் வெளியானது. அரிசிகெரே தொகுதி மட்டுமின்றி கர்நாடக சட்டசபை அரங்கிலும் ஜாம்பவானாக பாாக்கப்பட்டவர் சிவலிங்கேகவுடா. தற்போது அவர் காங்கிரசில் சேர்ந்தால், அரிசிகெரே சட்டசபை தொகுதியில் மாற்றம் ஏற்பட்டு விடும். அதாவது காங்கிரஸ்தான் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.
காங்கிரஸ் பிரமுகர் நிறுத்தம்?
இதை முன்கூட்டியே அறிந்த குமாரசாமி அரிசிகெரேவை தக்க வைத்து கொள்ள விரும்புகிறார். இதனால் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த சசிதர் என்பவரை நிறுத்த குமாரசாமி முடிவு செய்துள்ளார். ஏனென்றால், சசிதர் அரிசிகெரே தொகுதியில் 2 முறை, சிவலிங்கேகவுடாவை எதிர்த்து போட்டியிட்டிருக்கிறார். சிவலிங்கேகவுடாவிற்கு நெருக்கடி கொடுக்கும் அளவிற்கு சசிதருக்கு வாக்கு வங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதை பயன்படுத்தி, சசிதரை ஜனதா தளம் (எஸ்) கட்சியில் சார்பில் நிறுத்த குமாரசாமி முடிவு செய்துள்ளார்.
இதற்கு அச்சாரமாக நேற்று குமாரசாமி தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் பிரமுகர் சசிதரின் வீட்டிற்கு சென்று, அவரை சந்தித்தார். அப்போது குமாரசாமி, சசிதரிடம் அரிசிகெரே தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் போட்டியிடவேண்டும் என்று அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. அதை சசிதர் ஏற்று கொண்டதாக தெரிகிறது.
கால அவகாசம் வேண்டும்
இருப்பினும் அவர் வெளிப்படையாக எதையும் கூறவில்லை. அதாவது சில நாட்கள் கால அவகாசம் கொடுக்கும்படி சசிதர் கேட்டுள்ளார். இதனால் விரைவில் அவா் தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு வேலை சசிதர், ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு சம்மதம் தெரிவித்தால், அரிசிகெரே தொகுதியில் கடும் போட்டி நிலவு என்று கூறப்படுகிறது. இதனால் அரிசிகெரே தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.