சட்டசபை தேர்தலில் கோலார் தொகுதியில் போட்டியா?

கோலார் தொகுதியில் குமாரசாமி போட்டியிடுகிறாரா? என்ற கேள்விக்கு அவரே பதிலளித்துள்ளார்.

Update: 2022-10-30 18:45 GMT

பெங்களூரு:

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மக்களின் பிரச்சினைகள்

கர்நாடக சட்டசபை தேர்தலில் நான் கோலார் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று எங்கள் கட்சி தொண்டர்கள் கூறுகிறார்கள். அங்குள்ள மக்களின் பிரச்சினைகள் என்ன என்பது எனக்கு தெரியும். கோலாரில் எங்கள் கட்சிக்கு தகுதியான வேட்பாளர்கள் பலர் உள்ளனர். கோலார் தங்கவயல் தவிர பிற தொகுதிகளில் எங்கள் கட்சிக்கு ஆதரவு அதிகமாக உள்ளது.

கே.ஆர்.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தீஸ் உயிரிழப்பு குறித்து மந்திரி எம்.டி.பி.நாகராஜ் கருத்து கூறியுள்ளார். ரூ.80 லட்சம் வரை பணி மாறுதலுக்கு அவர் கொடுத்திருப்பார் என்று மந்திரி கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். நந்தீஸ் இறப்பு, போலீஸ் துறையில் நடைபெறும் கருப்பு சம்பவங்களுக்கு சாட்சியாக உள்ளது.

பணி இடைநீக்கம்

மந்திரி கோட்டா சீனிவாச பூஜாரியை தவிர வேறு எந்த மந்திரியும் சரியாக பணியாற்றுவது இல்லை. மற்ற மந்திரிகள் அனைவரும் பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். நந்தீஸ் ரூ.80 லட்சம் கொடுத்து 3 மாதங்கள் கூட ஆகாத நிலையில் அவரை பணி இடைநீக்கம் செய்தனர். அந்த பணத்தில் யார்-யாருக்கு எவ்வளவு போனது என்பது குறித்து விசாரணை நடைபெற வேண்டும்.

சில மந்திரிகள் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும், அவர்களுக்கு பணம் மீதான தாகம் குறையவில்லை. பா.ஜனதா அரசுக்கு வெட்கமே இல்லை. நாங்கள் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளா்களை விரைவில் வெளியிடுவோம். 123 தொகுதிகளுக்கு வேட்பாளா்களை முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்