கேரள கலால் துறை அதிகாரிகளுடன் குடகு கலெக்டர் ஆலோசனை

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி மது கடத்தலை தடுப்பது குறித்து கேரள கலால் துறை அதிகாரிகளுடன் குடகு கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

Update: 2023-02-19 20:12 GMT

குடகு, பிப்.21-

ஆலோசனை கூட்டம்

கர்நாடகத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். இந்த தேர்தலையொட்டி மது கடத்தலை தடுப்பது குறித்து நேற்று முன்தினம் கேரள எல்லையில் உள்ள குடகு மாவட்டம் மடிகேரியில் உள்ள தனியார் ஓட்டலில் கேரள கலால் துறை அதிகாரிகளுடன் குடகு கலெக்டர் சதீஸ் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், கேரள மாநிலம் காசர்கோடு, கண்ணூர், வயநாடு, மாவட்ட கலால் துறை அதிகாரிகளும், குடகு மற்றும் தட்சிண கன்னடா மாவட்ட கலால் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

மது கடத்தலை தடுக்க..

இந்த கூட்டத்தில் கலெக்டர் சதீஸ் பேசுகையில், கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி மதுபானம் கடத்தலை தடுக்க கேரள மற்றும் கர்நாடக மாநில அதிகாரிகள் கைகோர்த்து செயல்பட வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, மாநில எல்லையில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். குடகு மாவட்டம் கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால், இரு மாநில அதிகாரிகளும் தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

சட்டசபை தேர்தலின்போது எந்தவித சட்டவிரோத செயல்களுக்கும் இடம் அளிக்காமல் தேர்தலை சுமுகமாகவும், அமைதியாகவும் நடத்த மாநிலங்களுக்கு இடையேயான சோதனைச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

கேரள அதிகாரிகள்

தட்சிண கன்னடா மாவட்ட கலால் துறை இணை கமிஷனர் நாகராஜப்பா பேசுகையில், கர்நாடகத்தையொட்டி அமைந்துள்ள காசர்கோடு, கண்ணூர், வயநாடு மாவட்டங்களில் இருந்து அதிகளவு மதுபானங்கள் கடத்தி வரப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் இருமாநில அதிகாரிகளும் கூட்டு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். எந்த வகையான போதைப்பொருட்களையும் கடத்த அனுமதிக்கக்கூடாது. சட்டம்-ஒழுங்கு தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து கேரள மாநிலம் காசர்கோடு, வயநாடு, கண்ணூர் மாவட்ட கலால் துறை அதிகாரிகள் பேசுகையில், கர்நாடக சட்டசபை ேதர்தலின்போது சோதனைச்சாவடியில் அதிகாரிகள் உள்பட 8 பேரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மதுபானம் கடத்துவதை தடுக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும். கர்நாடக சட்டசபை தேர்தல் அமைதியாக நடக்க அனைத்து வகையிலும் உதவுவோம் என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்