வாலிபரை கொன்று உடலை தண்டவாளத்தில் வீச முயன்ற 3 பேர் கைது
ஹாசனில், வாலிபரை கொன்று உடலை தண்டவாளத்தில் வீச முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சென்ற கார் விபத்தில் சிக்கியதால் போலீசில் பிடிபட்டனர்.
ஹாசன்;
காரில் வாலிபர் பிணம்
ஹாசன் தாலுகா சாந்தி கிராமம் அருகே பெனகட் பகுதியில் ரெயில்வே தண்டவாளம் ஒன்று உள்ளது. நேற்றுமுன்தினம் இந்த தண்டவாளத்தின் அருகே உள்ள சாலையில் கார் ஒன்று அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது. திடீரென்று கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடியது. இதையடுத்து கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.இதை பார்த்த பொதுமக்கள் ஓடி வந்து காரில் சிக்கியிருந்த 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து ஹாசன் டவுன் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காரை மீட்டு சோதனை செய்தனர். அப்போது உள்ளே வாலிபர் ஒருவரின் பிணம் இருந்தது. இதைப்பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காரில் வந்த 3 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
கைது
அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது காரில் பிணமாக கிடந்தவர் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த் (வயது 30) என்று தெரியவந்தது. இவர் ஹாசனில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவருடன் 3 பேரும் வேலை பார்த்து வந்துள்ளனர்.
இவர்களுக்கும், ஆனந்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது 3 பேரும் சேர்ந்து, ஆனந்த்தை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதையடுத்து அவர்கள் உடலை தண்டவாளத்தில் வீசி, தற்கொலை செய்து கொண்டதுபோன்று ஜோடிக்க முடிவு செய்தனர்.
இதற்காக உடலை காரில் ஏற்றி கொண்டு தண்டவாளத்தில் வீசுவதற்கு வந்தபோது, விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இதுதொடர்பாக 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைதான 3 பேரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து ஹாசன் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.