'உங்களின் பிரச்சினை தீரும் என்றால் என்னை கொல்லுங்கள்'

உங்களின் பிரச்சினை தீரும் என்றால் என்னை கொல்லுங்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உருக்கமாக கூறியுள்ளார்.

Update: 2023-05-08 22:33 GMT

பெங்களூரு:-

மிரட்டல் வந்திருக்காது

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று தனது சொந்த ஊரான கலபுரகியில் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

நான் உள்பட எனது குடும்பத்தினரை கொலை செய்வதாக பா.ஜனதா வேட்பாளர் கூறியுள்ளார். இந்த விஷயம் பா.ஜனதா தலைவர்களின் மனதில் தோன்றி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வேறு யாருக்கு கார்கே குடும்பத்தை அழிக்க இத்தகைய தைரியம் வரும். அவரது மிரட்டலுக்கு பின்னணியில் சில பா.ஜனதா தலைவர்கள் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த மிரட்டல் வந்திருக்காது.

அரசியல் சாசனம்

என்னை பாதுகாக்க அம்பேத்கரின் அரசியல் சாசனம் உள்ளது. எனக்கு ஆதரவாக கலபுரகி மற்றும் கர்நாடக மக்கள் உள்ளனர். நான் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு எனக்கு ஆதரவாக இந்திய மக்களும் இருக்கிறார்கள். என்னையும், எனது குடும்பத்தினரையும் அழித்தால், எனது இடத்திற்கு வேறு நபர் வருவார். நானும், எனது மகனும் பா.ஜனதா தலைவர்களுக்கு எதிராக பேசுவதால், எங்களை ஒழிக்க திட்டமிடுகிறார்கள். பிரதமர் மோடியும் அதே போல் தான் நடந்து கொள்கிறார்.

என்னை பற்றி நீங்கள் (மோடி) பேசுங்கள், அது சரி. ஆனால் எனது மகனை பற்றி பேசுவது ஏன்?. எனது மகன் உங்களுக்கு (மோடி) சமமானவர் இல்லை. நான் கடந்த 52 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன். ஆனால் எனது குடும்பத்தினரை எதற்காக இழுக்கிறீர்கள்?. நான் சிறுவயதாக இருந்தபோது, ஒட்டுமொத்தமாக எனது குடும்பத்தினரை இழந்து தனியாக நின்றேன்.

போனஸ் வயது

நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன். மக்களின் ஆசியுடன் நாங்கள் தொடர்ந்து வாழ்வோம். பா.ஜனதாவினர் என்ன நினைக்கிறார்களோ அதை செய்யட்டும், நானும் வலுவாக தான் உள்ளேன். ஒரு மனிதன் 90 அல்லது 100 ஆண்டுகள் வாழலாம். ஆனால் இந்தயாவில் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 70 அல்லது 71 வயது தான். நான் அந்த வயது வரம்பை தாண்டி தற்போது போனஸ் வயதில் உள்ளேன்.

எனக்கு தற்போது 81 வயது ஆகிறது. நான் இன்னும் 8 முதல் 10 ஆண்டுகள் உயிருடன் இருக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு முன்பு என்னை நீங்கள் கொலை செய்ய விரும்பினால் அதுபற்றி நான் கவலைப்படவில்லை. உங்களின் பிரச்சினை தீரும் என்றால் என்னை கொல்லுங்கள். நான் அதற்கு தயாராக உள்ளேன். ஆனால் எனது உயிர் மூச்சு உள்ளவரை ஏழை மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன். நீங்கள் (மக்கள்) என்னுடன் இருக்கும் வரை எனக்கு எந்த பயமும் இல்லை.

பெருமையான தருணம்

எனக்கு கட்சியின் அகில இந்திய தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது பெருமையான தருணம். அதனால் கலபுரகியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வைக்க வேண்டும். கலபுரகிக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி கிடைத்துள்ளது பெருமையான விஷயம். அதற்கு கவுரவத்தை கொடுப்பது உங்களின் கைகளில் தான் உள்ளது. காங்கிரஸ் வெற்றி பெற்றால் தான் எனக்கு மரியாதை கிடைக்கும். ஏனெனில் நீங்கள் இல்லாமல் நானில்லை.

கடந்த 52 ஆண்டுகளில் உங்களுக்கு அவப்பெயரை நான் ஏற்படுத்தவில்லை. பிரதமர் மோடி, பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு எதிராக போராடியுள்ளேன். நீதிக்காக போராடியுள்ளேன். குஜராத் தேர்தலின்போது, அங்கு பிரசாரம் நடத்திய பிரதமர் மோடி, நான் இந்த மண்ணின் மகன், தனக்கு வாக்களிக்குமாறு கேட்டார். நான் இப்போது கேட்கிறேன், நான் இந்த மண்ணின் மகன், எனக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும். நான் இந்த பகுதியின் வளா்ச்சிக்கு பாடுபட்டுள்ளேன். ஆனால் பிரதமர் மோடி ஓட்டு கேட்க இந்த பகுதிக்கு என்ன செய்தார்?.

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்