ஆட்டோவில் கடத்தி வாலிபர் படுகொலை
கஞ்சா விற்பதாக கூறி வந்ததால் வாலிபர் ஆட்டோவில கடத்தி கழுத்தை அறுத்து கொலை செய்த நண்பர்கள் 3 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.
சம்பிகேஹள்ளி:-
கஞ்சா விற்பதாக கூறியதால்...
பெங்களூரு சம்பிகேஹள்ளி பகுதியை சேர்ந்தவர் பரூக் கான் (வயது 23). இவரது நண்பர்கள் சுகைல், முபாரக், அலி அக்ரம் ஆகியோர் ஆவார்கள். சுகைல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த பரூக் கான், சுகைலை கண்டித்துள்ளார். எனினும் அவர் அதை கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது. இதற்கிடையே கடந்த 2நாட்களுக்கு முன்பு இந்தவிவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி அன்று பரூக் கான் அந்த பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றார்.
போலீசில் சரண்
அப்போது சுகைல் தனது நண்பர்கள் சிலருடன் ஆட்டோவில் வந்தார். அவர் பரூக் கானை ஆட்டோவில் கடத்தி சென்றார். பின்னர் அர்க்காவதி லே-அவுட் அருகே ஆட்டோவில் வைத்து, பரூக் கானை அவர்கள் தாக்கினர்.
பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பரூக் கானை கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்து இறந்தார். பின்னர் அவர்கள் சம்பிகேஹள்ளி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
கொலை வழக்கு
அப்போது அவர்கள் சுகைல், முபாரக், அலி அக்ரம் ஆகியோர் என்பதும், தன்னை கஞ்சா விற்பனை செய்பவர் என பரூக் கான் கூறி வந்ததால் ஆத்திரத்தில் தனது நண்பர்கள் உதவியுடன் அவரை ஆட்டோவில் கடத்தி கொலை செய்தது தெரிந்தது.
அவர்கள் 3 பேர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பரூக் கான் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் பெங்களூருவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.