லிப்ட் கேட்டு விஷ ஊசி போட்டு கொலை"மனைவியே கள்ளக்காதலனை ஏவி கொலை செய்தார் திடுக்கிடும் தகவல்
லிப்ட் கேட்டு விஷ ஊசி போட்டு கொலை செய்த சம்பத்தில் மனைவியே கள்ளக்காதலனை ஏவி கொலை செய்து உள்ளார் என திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் கம்மம், பொப்பரானி கிராமத்தை சேர்ந்த ஜமீல் (வயது 45). பைக்கில் அவரது மகள் வீடு அமைந்துள்ள வல்லபீக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வல்லபீ கிராமத்தின் அருகே சாலையில் ஒருவர் லிப்ட் கேட்டார். அதை பார்த்த ஜமீல் பைக்கை நிறுத்தி அவரை ஏற்றிக் கொண்டு மீண்டும் வேகமாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னாடி இருந்த நபர் திடீரென ஜமீலின் முதுகில் ஊசி போட்டார். சுருக்கென தனது முதுகில் குத்தியதை உணர்ந்த ஜமீல் பைக்கை நிறுத்த முயன்றார். அப்போது லிப்ட் கேட்டு வந்தவர் வாகனத்தை நிறுத்துவதற்குள் இறங்கி தப்பி ஓடிவிட்டார்.
லிப்ட் கேட்டு வந்தவர் தப்பி ஓடுவதற்கு முன்னதாக ஊசி போட பயன்படுத்திய சிரிஞ்சை சாலை ஓரத்தில் வீசி விட்டு ஓடினார் அதைப் பார்த்துவிட்ட ஜமீல் தனக்கு ஊசி போட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக செல்போன் மூலம் தனது மனைவிக்கு தெரியப்படுத்தினார்.
அவர் பதறிபோய், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். அதற்குள் ஜமீலுக்கு தலைசுற்றல் ஏற்பட்டது, அந்த வழியாக செல்வோரிடம் நடந்த விஷயங்களை கூறி உதவி கேட்டார் அவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிலர், 108 ஆம்புலன்சு வரவழைத்தனர்.
ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஜமீல் இறந்தார். இது குறித்து ஜக்கைய்யா பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
தற்போது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாவது;-
ஆந்திர மாநிலம், கம்பம் மாவட்டம், சித்தகானி பகுதியை சேர்ந்த ஷேக் ஜமால் சாயபு. இவரது மனைவி ஷேக் இமாம் பீ (வயது 46). தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இருவருக்கும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இமாம் பீ-க்கும், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மோகன் ராவ் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது.
இமாம் பீ, மோகன் ராவுடன் வீட்டில் தனிமையில் இருந்தபோது அவரது கணவர் ஷேக் ஜமால் சாயபு பார்த்துவிட்டார். ஆத்திரமடைந்த அவர் மனைவியை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.
கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என கள்ளக்காதலன் மோகன் ராவிடம் இமாம் பீ தெரிவித்தார். இதையடுத்து இமாம் பீ கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்த அவர்கள் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ரூ.3500 கொடுத்து 2 ஊசிகளை வாங்கி வந்தனர்.
இமாம் பீ ஒரு ஊசியும், மோகன் ராவிடம் ஒரு ஊசியும் வைத்துக்கொண்டனர். இமாம் பீயால் கணவருக்கு விஷ ஊசி போட முடியாத சூழ்நிலை நிலவியது. இதையடுத்து இமாம் பீ தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கிருந்து கணவருக்கு போன் செய்து நாளை மகள் வீட்டிற்கு வந்து என்னை அழைத்துச் செல்லுமாறு கூறினார்.
இதுகுறித்து மோகன்ராவிடம் தெரிவித்த இமாம் பீ அவர் வரும் வழியில் லிப்ட் கேட்டு பைக்கில் ஏறிக்கொண்டு விஷ ஊசி போட்டு கொல்ல வேண்டும் என திட்டம் போட்டு கூறினார். மோகன்ராவ் தனது நண்பர்களான வெங்கண்ணா, வெங்கடேஷ், யஸ்வந்த் சாம்பசிவ ராவ் ஆகியோருடன் சேர்ந்து மதிகொண்ட மண்டலம் அருகே பைக்கில் காத்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஷேக் ஜமால் சாயபு பைக்கை நிறுத்தி லிப்டு கேட்டு வெங்கடேஷ் பைக்கில் ஏறிக்கொண்டார். செல்லும் வழியில் ஷேக் ஜமால் சாயபுக்கு இடுப்பில் விஷ ஊசியை செலுத்திவிட்டு வெங்கடேஷ் தப்பிச் சென்றார்.
இதில் மயங்கி சரிந்த ஷேக் ஜமால் சாயபு பரிதாபமாக துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இமாம் பீ செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது அவர் அடிக்கடி மோகன் ராவிடம் பேசியது தெரிய வந்தது. இதையடுத்து ஷேக் இமாம் பீ, அவரது கள்ளக்காதலன் மோகன் ராவ், அவரது நண்பர்கள் வெங்கண்ணா, வெங்கடேஷ், யஸ்வந்த், சாம்பசிவ ராவ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.