கேரள சகோதரிகள் பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு: மறுவிசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவு

கேரள மைனர் சகோதரிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றப்பத்திரிகையை தள்ளுபடி செய்து மறுவிசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Update: 2022-08-11 03:46 GMT

பாலக்காடு,



கேரளாவில் வாளையார் பகுதியில் 2017-ம் ஆண்டு நடந்த மைனர் சகோதரிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு பரபரப்பு ஏற்படுத்தியது. இதில், அந்த ஆண்டின் ஜனவரி 13-ந்தேதி 13 வயது நிரம்பிய மூத்த சகோதரி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

அதன்பின்னர் 2 மாதங்கள் கழித்து மார்ச் 4-ந்தேதி, சிறுமியின் 9 வயது சகோதரி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். பிரேத பரிசோதனை அறிக்கையில் இரு சிறுமிகளும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதுபற்றி விசாரணை நடத்திய சி.பி.ஐ. அமைப்பு பாலக்காடில் உள்ள போக்சோ கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில், சிறுமிகள் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பின்னர், அதனை பொறுக்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், சிறுமியின் குடும்பத்தினர், அவர்கள் இருவரும் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளது. இந்த பரபரப்பு நிறைந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேரில் ஒருவரான பிரதீப் குமார் 2020-ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டார் என சந்தேகிக்கப்படுகிறது. மீதமுள்ள 3 பேரில் 2 பேர் சிறையிலும், ஒருவர் ஜாமீனில் வெளியேயும் உள்ளனர்.

அவர்களில் வாலியா மது, குட்டி மது இருவரும் சிறுமிகளின் குடும்பத்துக்கு நெருங்கிய உறவினர்கள். மற்றொரு குற்றவாளியான ஷிபு குடும்பத்துக்கு நெருங்கிய நண்பராவார்.

இந்த சகோதரிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில், பாலக்காடு போக்சோ கோர்ட்டில், சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது. வழக்கில் மறுவிசாரணை நடத்தும்படியும், சி.பி.ஐ.க்கு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இதுபற்றி சிறுமிகளின் தாயார் கூறும்போது, வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையானது, கேரள போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஒத்திருந்தது. இரு சிறுமிகளும் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

கோர்ட்டின் இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. போலீசார் மற்றும் சி.பி.ஐ. அமைப்பின் குற்றப்பத்திரிகையை தள்ளுபடி செய்து உள்ளது. சி.பி.ஐ. குழுவை நேரில் சந்தித்து, எங்களுடைய மகள்கள் கொலை செய்யப்பட்டு உள்ளனர் என தெரிவித்தோம். ஆனால், அவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை. இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் மீண்டும் உண்மையுடன் வழக்கு விசாரணை நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம் என அவர் கூறியுள்ளார். 2019-ம் ஆண்டு பாலக்காடு சிறப்பு கோர்ட்டு 4 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து இருந்தது. அதனை ரத்து செய்து கேரள ஐகோர்ட்டு மறுவிசாரணை நடத்தும்படி உத்தரவிட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்