காதலனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த கல்லூரி மாணவி போலீஸ் நிலையத்தில் தற்கொலை நாடகம்...!

கிரீஷ்மா காவல் நிலைய கழிவறையில் லைசோலை குடித்து தற்கொலைக்கு முயன்றார்

Update: 2022-10-31 08:04 GMT

திருவனந்தபுரம்

 கேரளாவில் அமைந்துள்ள பகுதி பாறசாலை. இந்தப் பகுதியில் உள்ள மூரியங்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ் (23). இவர் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 'ரேடியாலஜி' இறுதி ஆண்டு படித்து வந்தார்.

கல்லூரிக்கு சென்று வரும் வழியில், களியக்காவிளை அருகே உள்ள ராமன்சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா (20) என்ற இளம்பெண்ணுக்கும், ஷோரோன் ராஜுக்கும் நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் ஓராண்டுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் இருவரின் வீட்டுக்குமே அரசல்புரசலாக தெரியும் எனக் கூறப்படுகிறது.

இந்த சூழலில், கடந்த 14-ம் தேதியன்று தனது வீட்டில் யாரும் இல்லை எனக் கூறி காதலன் ஷாரோன் ராஜை கிரீஷ்மா அழைத்துள்ளார். அங்கு அவர் சென்று வந்து உள்ளார். அப்போது திடீரென ஷாரோன் ராஜுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு துடித்துள்ளார். பின்னர் இதுகுறித்து ஷாரோன் ராஜ் தனது நண்பர் ஒருவருக்கு தகவல் அளித்தார். இதன்பேரில், அங்கு வந்த அவர், ஷாரோன் ராஜை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மறுநாள் அவரது வாயில் புண்கள் ஏற்பட்டன. தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமாகவே, திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக ஷாரோன் ராஜ் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் அவர் இறந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஷாரோன் ராஜின் காதலியான கிரீஷ்மாவிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, தனது வீட்டிற்கு வந்த ஷாரோன் ராஜுக்கு தான் ஒரு ஜூஸ் கொடுத்ததாகவும், அதன் பிறகே அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாகவும் கிரீஷ்மா தெரிவித்தார். மேலும், அந்த ஜூஸ் பாட்டிலை பார்த்த போது தான் அது காலாவதியாகி விட்டது என்பது தெரியவந்ததாகவும் அவர் கூறினார்.

அதுமட்டுமின்றி, ஜூஸை குடித்ததால்தான் ஷாரோன் ராஜ் உயிரிழந்ததாகவும், தன்னை கைது செய்யுமாறும் போலீசாரிடம் கிரீஷ்மா கதறி அழுதிருக்கிறார். இதனைக் கேட்ட போலீசார், அந்த ஜூஸ் பாட்டில் எங்கே எனக் கேட்டுள்ளனர். அதற்கு அவர், கோபத்தில் அதை தூக்கி பாதாளச் சாக்கடையில் எறிந்துவிட்டதாக கூறினார். இதுதான் போலீசாருக்கு அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக, கிரீஷ்மாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை போலீசார் மேற்கொண்டனர். அப்போது அப்போது அவர் கூறியது போலீஸாரையே அதிரச் செய்துவிட்டது. கிரீஷ்மா போலீசாரிடம் கூறியதாவது: நானும், ஷாரோன் ராஜும் உயிருக்கு உயிராகவே காதலித்து வந்தோம். திருமணம் செய்யவும் முடிவு செய்தோம். அப்போதுதான், எங்களுக்கு தெரிந்த ஜோதிடரிடம் எனது ஜாதகத்தை காண்பித்தேன். அதை பார்த்த அவர், என் ஜாதகப்படி எனது முதல் கணவர் இறந்துவிடுவார் எனக் கூறினார். இதனால், எதிர்காலம் மீது எனக்கு பயம் ஏற்பட்டது. எனவே ஷாரோன் ராஜ் மூலமே எனது ஜாதகத்துக்கு பரிகாரம் செய்ய முடிவு செய்தேன்.

அதன்படி, கடந்த மாதம் ஷாரோன் ராஜை சந்தித்த நான், என்னை ஒரு சம்பிராயத்துக்காக திருமணம் செய்யுமாறு வற்புறுத்தினேன். அதன்படி, ஒரு கோயிலுக்கு சென்ற நாங்கள், மாலை மட்டும் மாற்றி திருமணம் செய்தோம். இது வேறு யாருக்கும் தெரியாது.

பின்னர் அவனை கொலை செய்ய முடிவெடுத்தேன். அதன்படி, கடந்த 14-ம் தேதி ஷாரோனை எனது வீட்டுக்கு வரவழைத்தேன். அப்போது, எங்கள் வீட்டில் இருந்த கசாயத்தை காய்ச்சி அதில் பூச்சி மருந்தை கலந்தேன். பின்னர், உன்னால் இவ்வளவு கசப்பையும் குடிக்க முடியுமா என்பது போல விளையாட்டாக பேச்சுக் கொடுத்து, இந்த கசாயத்தை குடிக்கச் செய்தேன்.

அவனும் சவால் என நினைத்து அதை குடித்தான். பின்னர் உடலில் விஷம் ஏறி அவன் இறந்துவிட்டான். இவ்வாறு கிரீஷ்மா வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, போலீசார் கிரீஷ்மாவை கைது செய்தனர்.

இந்த நிலையில் கிரீஷ்மா காவல் நிலைய கழிவறையில் லைசோலை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.தற்போது கிரீஷ்மாவின் உடல்நிலையில் எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரீஷ்மாவின் தற்கொலை முயற்சி விசாரணையில் இருந்து தப்பிக்க நடத்தப்பட்ட நாடகம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்