கேரளா: திருக்காகரை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

கேரளாவில் திருக்காகரை சட்டசபை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் உமா தாமஸ் வெற்றி பெற்றார்.

Update: 2022-06-03 21:04 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் திருக்காகரை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி.டி.தாமஸ். இந்தநிலையில் அவர் உடல் நலக்குறைவால் திடீரென மரணம் அடைந்தார்.

அதை தொடர்ந்து காலியாக இருந்த அந்த தொகுதிக்கு கடந்த 31-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் பி.டி.தாமசின் மனைவி உமா தாமஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் டாக்டர் ஜோசப், பா.ஜ.க. சார்பில் ஏ.என்.ராதாகிருஷ்ணன் உள்பட 8 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

இடைத்தேர்தலில் 68.75 சதவீத வாக்குகள் பதிவானது. இந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் உமா தாமஸ் முன்னிலை வகித்தார். இறுதி சுற்று முடிவில் 72 ஆயிரத்து 770 ஓட்டுகள் பெற்று உமாதாமஸ் வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் 47 ஆயிரத்து 754 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார். அதாவது 25 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.

பா.ஜ.க. வேட்பாளருக்கு 12 ஆயிரத்து 957 ஓட்டுகளும் கிடைத்தன. கடந்த தேர்தலில் இதே தொகுதியில் 15 ஆயிரம் ஓட்டுகள் வாங்கிய பா.ஜ.க. இடைத்தேர்தலில் அதனை விட குறைவான ஓட்டுகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

திருக்காகரை தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை உமா தாமஸ் பெற்று உள்ளார். இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பென்னி பெகனான் 22 ஆயிரத்து 406 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே அதிகபட்சமாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்