கேரள குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

கேரளாவில் மதவழிபாட்டு கூட்டரங்கில் அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்தன.

Update: 2023-10-30 03:55 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் உள்ள ஜம்ரா என்கிற சர்வதேச மாநாட்டு மையத்தில் நேற்று காலை யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ மதவழிபாட்டு கூட்டரங்கு நடைபெற்றது. இந்த கூட்டரங்கில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டரங்கில் காலை 9.45 மணியளவில் பிரார்த்தனை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அரங்கின் மையப்பகுதியில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதை சற்றும் எதிர்பாராத மக்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது சில வினாடிகளில் அரங்கின் பக்கவாட்டு பகுதிகளில் இருந்து மேலும் 2 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இதனால் கூட்டரங்கில் தீ பற்றி எரிந்தது.

இந்த தொடர் குண்டுவெடிப்பில் சம்பவ இடத்திலேயே லிபினா என்ற பெண் உடல்கருகி உயிரிழந்தார். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் குமாரி என்ற பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், தொடர் குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் கேரளா தொடர் குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, இந்த குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தியதாக திரிச்சூர் மாவட்ட போலீஸ் நிலையத்தில் டொமினிக் மார்டின் என்ற நபர் சரணடைந்துள்ளார். யெகோவாவின் சாட்சிகள் அமைப்பின் செயல்பாடுகள் நாட்டுக்கு ஆபத்தானது மற்றும் இளைய தலைமுறையினர் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் உள்ளதால் இந்த தாக்குதல் நடத்தியதாக டொமினிக் மார்டின் கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட மார்டினிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்