பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரள சட்ட சபையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது

ேகரள சட்டசபையில் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-08-08 22:15 GMT

திருவனந்தபுரம்,

கேரள சட்டசபையின் 9-வது கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளான நேற்று மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிப்பதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக அந்த தீர்மானத்தை கொண்டு வந்து முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பொது சிவில் சட்டம் நாட்டின் மத நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் ஒன்றாகும். அரசியல் அமைப்பு சட்டத்தின் முக உரையிலேயே மதசார்பின்மைக்கு உறுதி அளிக்கும் நாடு இந்தியா. எந்த மத விசுவாசியாக இருந்தாலும், அதன்படி சுதந்திரமாக வாழ ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமை உள்ளது என்பதை அரசியல் அமைப்பு சட்டம் உறுதிப்படுத்துகிறது.

மத்திய அரசு பின்வாங்க வேண்டும்

அவசர கோலத்தில் எடுத்த பொது சிவில் சட்ட தீர்மானத்தில் இருந்து மத்திய அரசு பின்வாங்க வேண்டும் என்று கேரள சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த முதல் மாநிலம் கேரளாதான்.

பொது சிவில் சட்டத்தை திணிக்கும் மத்திய அரசின் முயற்சியால் கேரள சட்டசபை கவலை மற்றும் அச்சம் கொண்டுள்ளது. மத்திய அரசு எடுத்துள்ள இந்த அவசர முடிவு அரசியல் அமைப்பு சட்டத்தின் மதசார்பின்மை நோக்கத்தை இல்லாமை செய்வதாக இந்த சபை கருதுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் ஆதரவு

இதற்கிடையே பொது சிவில் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து இந்த சட்டத்திற்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஏ.என்.சம்சீர் சட்டசபையில் அறிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்