கேரளா: எக்ஸ்பிரஸ் ரெயிலில் வாக்குவாதம்; சக பயணியை கீழே தள்ளி விட்டு கொன்ற தமிழக நபர்
கேரளாவில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வாக்குவாதம் முற்றியதில் சக பயணியை கீழே தள்ளி விட்டு கொலை செய்த தமிழக நபரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
கோழிக்கோடு,
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் கோயிலண்டி பகுதியில் ரெயில் தண்டவாள பகுதியில் கிடந்த 25 வயது ஆடவரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், மங்களூரு சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்டிரல் செல்லும் மலபார் எக்ஸ்பிஸ் ரெயிலில் பயணித்த இரு பயணிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
இதில் மோதல் முற்றியதில், சக பயணியை ஒருவர் ரெயிலில் இருந்து கீழே தள்ளி விட்டு உள்ளார். இந்த சம்பவத்தில் தமிழகத்தின் சிவகங்கை மாவட்ட பகுதியை சேர்ந்த சோனைமுத்து (வயது 48) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில், அவர் உண்மையை ஒப்பு கொண்டார்.
இதுபற்றிய வீடியோ ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அதில், 2 பேரும் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் இடம் பெற்று உள்ளன. இதில், கோபத்தில் கதவு பக்கத்தில் நின்ற சக பயணியை கைது செய்யப்பட்ட பயணி தள்ளி விடுகிறார்.
வீடியோ சான்றின் அடிப்படையில், அந்நபரை காவலில் எடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தின்போது போதையில் குற்றவாளி இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. விசாரணையில் அந்நபர் யாரென தனக்கு தெரியாது என்றும், பயணத்தின்போது சந்தித்த நபர் என்றும் கூறியுள்ளார். எனினும், அந்த இளைஞரை தள்ளி விட்டதற்கான காரணம் எதனையும் அவர் தெரிவிக்கவில்லை.
அடையாளம் காணப்படாத அந்த இளைஞர், புலம்பெயர் தொழிலாளி என முதற்கட்ட விசாரணை முடிவில் போலீசார் முடிவுக்கு வந்து, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இதேபோன்ற மற்றொரு சம்பவம் கோழிக்கோட்டில் கடந்த மாதம் நடந்தது. உத்தர பிரதேசத்தில் இருந்து வந்த புலம்பெயர் தொழிலாளியான விவேக் என்பவர் கண்ணூர் எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரசில் பயணித்தபோது, நண்பரான முபாதூர் இஸ்லாம் என்பவரால் கீழே தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வடகரா ரெயில் நிலையத்தில் அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.