உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்து: குஜராத் ஆசிரியைக்கு பிறந்தநாளே இறந்தநாளான சோகம்

ஹெலிகாப்டரை இயக்கிய மும்பையை சேர்ந்த விமானி, மலைப்பகுதி அனுபவமில்லாதவர் என தெரியவந்திருக்கிறது.

Update: 2022-10-19 23:51 GMT

குடும்பத்தினருடன் விமானி அனில்சிங் (உள்படம்: கிரித்தி பராத், உர்வி பராத், பூர்வா)

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக அதிர்ச்சியும், சோகமுமான பல தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த விபத்தில் குஜராத் பள்ளி ஆசிரியை, பிறந்தநாளில் பலியாகியிருக்கிறார். ஹெலிகாப்டரை இயக்கிய மும்பையை சேர்ந்த விமானி, மலைப்பகுதி அனுபவமில்லாதவர் என தெரியவந்திருக்கிறது.

பிறந்தநாளில் சோகம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பிரசித்திபெற்ற புனிதத்தலமான கேதர்நாத்தில் இருந்து திரும்பிய ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானதில் 7 பக்தர்கள் பலியாகினர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரும் அடக்கம்.

இந்த விபத்தில் உயிரிழந்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கிரித்தி பராத், ஒரு பள்ளி ஆசிரியை ஆவார். அவர் நேற்று முன்தினம்தான் தனது 30-வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். குஜராத்தின் பவநகரில் வசிக்கும் தனது தந்தையை தொலைபேசியில் அழைத்த அவர், ஏன் எனக்கு முதன்முதலில் பிறந்தநாள் வாழ்த்து சொல்லவில்லை என்று செல்லமாக கோபித்திருக்கிறார். இவர், பெற்றோருக்கு ஒரே மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சகோதரி, தோழி

இவருடன் பலியான ஒன்று விட்ட சகோதரி உர்வி பராத், தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி புரிந்தவர். இவரது தந்தை 2 ஆண்டுகளுக்கு முன் ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்ட நிலையில், 4 பேர் கொண்ட தனது குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபராக உர்வி இருந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த இவர்களின் தோழியான பூர்வா, கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி. கனடா நாட்டில் தனது வாழ்வைத் தொடங்க திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.

மலைப்பகுதி அனுபவமில்லாத விமானி

விபத்து குறித்து மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்களும் வெளிவந்திருக்கின்றன. இந்த ஹெலிகாப்டரை இயக்கிய மும்பையை சேர்ந்த கேப்டன் அனில்சிங், ராணுவத்தில் சுமார் 15 ஆண்டுகாலம் ஹெலிகாப்டர் ஓட்டிய அனுபவம் பெற்றிருந்தாலும், அங்கு அவர், கடல் பகுதியில், இரட்டை என்ஜின் ஹெலிகாப்டர்களை இயக்கியவர். விபத்துக்குள்ளானது, ஒற்றை என்ஜின் ஹெலிகாப்டர். மேலும் கடந்த மாதம்தான் விமானி அனில்சிங் இந்த மலைப்பகுதியில் விமானங்களை இயக்கத் தொடங்கியிருக்கிறார்.

விபத்துக்கு முந்தைய தினம் கடைசியாக மனைவியுடன் தொலைபேசியில் பேசிய இவர், உடல்நலம் குன்றியிருந்த தங்கள் ஒரே மகளை கவனமாக பார்த்துக்கொள்ளுமாறு கூறியிருக்கிறார்.

காற்றில் பறக்கும் விதிகள்

இந்த ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான காலநிலை காரணமாக கூறப்பட்டாலும், ஹெலிகாப்டர் சேவை நிறுவனங்களின் விதிமீறல்கள் விபத்துக்கு முக்கிய காரணம் என்று நிபுணர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர். விதிமீறலால், மனித உயிர்களுக்கு மட்டுமின்றி இப்பகுதிவாழ் அரிய விலங்கினங்களுக்கும் ஆபத்து என்று அவர்கள் சொல்கின்றனர்.

2 ஆயிரம் அடி உயரத்துக்கு குறைவாக ஹெலிகாப்டர்களை இயக்க அனுமதிக்கக்கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரகாண்ட் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அதுபோன்ற விதிகள் காற்றில் பறக்கவிடப்படுவது தொடர்கிறது. அதனால் இப்பகுதியில் ஏற்கனவே ஹெலிகாப்டர் விபத்துகள் நடத்தியிருப்பதுடன், சில விபத்துகள் அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டிருக்கின்றன.

ஆட்டோக்களை போல...

பெரும் இரைச்சலுடன், 10 நிமிடங்களுக்கு ஒருமுறை ஆட்டோக்களை போல ஹெலிகாப்டர்கள் பறப்பதாக கேதார்நாத், பத்ரிநாத் பகுதி கிராமவாசிகள் கூறுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்