தெலுங்கானாவில் பா.ஜ.க. வேட்பாளரின் கழுத்தை நெரித்த எம்.எல்.ஏ... டிவி லைவ் விவாதத்தில் பரபரப்பு

தெலுங்கானாவில் தொலைக்காட்சி நேரலை விவாதத்தின்போது பிஆர்எஸ் கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவர் பாஜக வேட்பாளரின் கழுத்தை பிடித்து நெரித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2023-10-26 10:14 GMT

ஐதராபாத்:

தெலுங்கானாவில் அடுத்த மாதம் 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. சில தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரசாரமும் தொடங்கிவிட்டது.

இந்நிலையில் தேர்தல் தொடர்பாக ஐதராபாத்தில் தெலுங்கு செய்தி தொலைக்காட்சி சார்பில் விவரதம் நடத்தப்பட்டது. இது லைவாக ஒளிபரப்பப்பட்டது. ஆளுங்கட்சியான பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் குத்புல்லாபூர் தொகுதி எம்எல்ஏ விவேகானந்துக்கும், அவரை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் குணா ஸ்ரீசைலம் கவுடாவுக்கும் இடையே காரசாரமாக விவாதம் நடந்தது.

ஒரு கட்டத்தில் பாஜக வேட்பாளர் ஒரு கருத்தை சொல்ல, எம்எல்ஏ விவேகானந்துக்கு கடும் ஆத்திரம் வந்தது. நேராக பாய்ந்து சென்று வேட்பாளரை தாக்கினார். கையில் இருந்த மைக்கை ஸ்டாண்டில் வைத்துவிட்டு, வேட்பாளரின் கழுத்தை பிடித்து நெரித்தார். பின்னர் போலீசாரும் மற்றவர்களும் அங்கு விரைந்து வந்து இருவரையும் விலக்கி விட்டனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை மாநில பாஜக தலைவரும் மத்திய மந்திரியுமான கிஷன் ரெட்டி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். சம்பந்தப்பட்ட பிஆர்எஸ் எம்எல்ஏ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும், இல்லாவிட்டால் பாஜக சட்டப் போராட்டம் நடத்தும் என்றும் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்