சவுதி அரேபியா சிறையில் சிக்கித்தவிக்கும் கர்நாடக வாலிபர்
புதிய செல்போன் வாங்கியதால் மோசடி வலையில் சிக்கிய கர்நாடக வாலிபர் தற்போது சவுதி அரேபியா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை மீட்க கோரி மத்திய அரசிடம் குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
பெங்களூரு :-
கர்நாடக வாலிபர்
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் கடபா அருகே ஐதூர் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட மூஜூரு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு பன்னாட்டு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார்.
அதையடுத்து அவருக்கு அந்த நிறுவனம் பதவி உயர்வு வழங்கி சவுதி அரேபியாவில் உள்ள கிளையில் பணியமர்த்தியது. அதையடுத்து சவுதி அரேபியாவுக்கு சென்ற சந்திரசேகர், அங்கு தனியாக ஒரு அறையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
இதையடுத்து கர்நாடகத்தில் அவருக்கு அவருடைய பெற்றோர் திருமணத்திற்கு வரன் தேடி வந்தனர். அதன்பேரில் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வருகிற ஜனவரி மாதம் அவரது திருமணம் நடைபெற உள்ளது.
புதிய செல்போன்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்திரசேகர் சவுதி அரேபியா நாட்டில் உள்ள ரியாத் நகருக்கு சென்றார். அங்கு ஒரு செல்போன் கடைக்கு சென்று புதிய செல்போனும், சிம் கார்டும் வாங்கினார். அவரது செல்போனை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமானால் சில விதிமுறைகள் உள்ளதாக கடையில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதை நம்பிய சந்திரசேகர் தன்னிடம் இருந்த அனைத்து ஆவணங்களையும் கொடுத்தார். பின்னர் செல்போனும், சிம்கார்டும் செயல்பட தொடங்கியது அங்கிருந்து தனது அறைக்கு வந்துவிட்டார்.
சிறையில் அடைப்பு
அதன்பிறகு ஒருவாரம் கழித்து அவரது செல்போனுக்கு ஒரு ஓ.டி.பி. எண் வந்தது. அடுத்த சில நொடிகளில் அவரது செல்போனுக்கு வந்த அழைப்பில், புதிய செல்போன் தொடர்ந்து செயல்பட அந்த ஓ.டி.பி. எண்ணை தெரிவிக்குமாறு மர்ம நபர் கேட்டுள்ளார்.
அதன்பேரில் சந்திரசேகர் அந்த ஓ.டி.பி. எண்ணை தெரிவித்தார். அதையடுத்து அடுத்த சில நாட்களில் சவுதி அரேபியா போலீசார் சந்திரசேகரை கைது செய்தனர். மேலும் அவரை சிறையில் அடைத்தனர்.
மோசடி
இதுபற்றி அவர்கள் இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் மூலம் விசாரித்தபோது, சந்திரசேகரின் பெயரில் ரியாத் நகரில் உள்ள ஒரு வங்கியில் கணக்கு தொடங்கி, அதன்மூலம் ஒரு பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து 22 ஆயிரம் ரியால்(ஒரு ரியால் என்பது இந்திய மதிப்பின்படி 22 ரூபாய் 17 காசுகள்) அபேஸ் செய்யப்பட்டு இருப்பதாகவும், அந்த பணத்தை சந்திரசேகரின் வங்கி கணக்கிற்கு மாற்றி அதிலிருந்து வேறொரு வங்கி கணக்கிற்கு ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் மர்ம நபர்கள் மாற்றி மோசடியில் ஈடுபட்டு இருப்பதாகவும் சவுதி அரேபியா போலீசார் தெரிவித்தனர்.
இதைக்கேட்டு பதறிபோன சந்திரசேகரின் குடும்பத்தார் உடனடியாக மத்திய வெளியுறவு அமைச்சகம், மத்திய மந்திரி ஷோபா உள்ளிட்டோரை அணுகினர். ஆனால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் அவர்கள் சந்திரசேகரை மீட்டு கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.