கர்நாடகத்தில் அடுத்த 10 நாட்கள் நல்ல மழை பெய்யும்

கர்நாடகத்தில் அடுத்த 10 நாட்கள் நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாக வருவாய்த்துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா கூறியுள்ளார்.

Update: 2023-07-06 18:45 GMT

பெங்களூரு:-

நல்ல மழை பெய்யும்

கர்நாடக சட்டசபையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தின்போது, பா.ஜனதா உறுப்பினர்கள் கர்நாடகத்தில் சில பகுதிகளில் நிலவும் வறட்சி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு வருவாய்த்துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா பதிலளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதத்தில் மழை பெய்யவில்லை. இதனால் வறட்சி நிலை ஏற்பட்டு இருந்தது. ஆனால் மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருகிறது. அடுத்த 10 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதனால் அடுத்து வரும் நாட்களில் நல்ல மழை பெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால் வறட்சி குறித்து முடிவு செய்ய இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

விதைகள் விதைப்பு

மழை பெய்யாத மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்டங்களுக்கு தலா ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை கொண்டு குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் தற்போது 193 கிராமங்களில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர்

வினியோகம் செய்யப்படுகிறது. 339 கிராமங்களில் தனியார் ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு கிருஷ்ண பைரேகவுடா பேசினார்.

அதைத்தொடர்ந்து பேசிய முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, "கர்நாடகத்தில் அனைத்து பகுதிகளில் மழை பெய்யவில்லை. 10 நாட்கள் தாமதமாக பருவமழை பெய்தாலும் அது விவசாயத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பருவமழைக்கு முன்பு பெய்யும் கோடை மழையின்போதே விவசாயிகள் விதைகளை விதைத்து விடுகிறார்கள். அந்த விதைகள் முளைத்து மேலே வர வேண்டுமெனில் குறித்த காலத்தில் பருவமழை தொடங்கி பெய்ய வேண்டும். ஆனால் இந்த முறை ஒரு மாதத்திற்கு பிறகே பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. சில பகுதிகளில் மட்டுமே இந்த மழை பெய்கிறது. அதனால் குடிநீர் பிரச்சினையை தீர்க்க தாலுகாக்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிதி ஒதுக்க வேண்டும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்