அமித்ஷாவின் வருகையால் கர்நாடக பா.ஜனதாவுக்கு கூடுதல் பலம் சேர்க்கும்; நளின்குமார் கட்டீல் பேட்டி

அமித்ஷாவின் வருகை கர்நாடக பா.ஜனதாவுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று, மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் கூறியுள்ளார்.

Update: 2022-12-27 18:45 GMT

பெங்களூரு:

வெற்றிக்கு வியூகம்

கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மத்திய உள்துறை மந்திரி வருகிற 30, 31-ந் தேதிகளில் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவரது வருகை கட்சி தலைவர்கள், தொண்டர்களுக்கு உத்வேகம் அளித்து உள்ளது. அவரது வருகை பா.ஜனதா கட்சியின் வெற்றியை உயர்த்தும். அமித்ஷாவின் வருகை வருகிற சட்டசபை தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு வியூகம் வகுக்கும்.

30-ந் தேதி மண்டியாவில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொள்கிறார். இந்த பொதுக்கூட்டம் பழைய மைசூருவில் பா.ஜனதாவை பலப்படுத்தும் கூட்டமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த மாநாட்டை சிறப்பாக நடத்த மந்திரிகள் கோபாலய்யா, அஸ்வத் நாராயண், மேல்-சபை உறுப்பினர் அஸ்வத் நாராயண் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

மீண்டும் ஆட்சி

31-ந் தேதி பெங்களூரு அரண்மனை மைதானத்தில் கட்சியின் தலைவர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. அங்கு தேர்தலில் வெற்றி பெற அமித்ஷா தனது ஆலோசனைகளை வழங்க உள்ளார். மாநிலத்தில் 150 தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும். ஜனசங்கல்ப யாத்திரை மூலம் மத்திய, மாநில அரசுளின் நலத்திட்டங்கள குறித்து மக்களிடம் எடுத்து கூறி உள்ளோம். இதனால் மக்கள் பா.ஜனதா மீது அதீத நம்பிக்கை வைத்து உள்ளனர். இந்த சூழ்நிலையில் அமித்ஷாவின் வருகை கட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்