கர்நாடக எம்.பி. பாலியல் சர்ச்சை விவகாரம்; பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? - ராகுல் காந்தி கேள்வி

பிரதமர் மோடியின் மவுனம் குற்றவாளிகளின் மனவலிமைக்கு ஊக்கம் அளிப்பதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Update: 2024-05-01 11:15 GMT

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக எம்.பி.யுமான பிரஜ்வால் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரஜ்வால் ரேவண்ணா பல பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவற்றை அவரே தனது மொபைலில் வீடியோ பதிவு செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த பிரஜ்வால் ரேவண்ணா, ஹாசன் தொகுதி எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார். தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் அதே தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு எதிரான ஆபாச வீடியோ விவகாரம் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ள நிலையில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியில் இருந்து பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகாவில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்டுள்ள கொடூரமான குற்றங்கள் குறித்து பிரதமர் மோடி வழக்கம் போலவே வெட்கக்கேடான மவுனம் காத்து வருகிறார் என்றும், இதற்கு பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

எல்லாம் தெரிந்திருந்தும் அவருக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரசாரம் செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள ராகுல் காந்தி, பெரும் குற்றவாளி இவ்வளவு எளிதாக நாட்டை விட்டு எப்படி தப்பியோடினார்? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது நாடு முழுவதும் குற்றவாளிகளின் மனவலிமைக்கு ஊக்கம் அளிப்பதாகவும், மோடியின் அரசியல் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதுதான் உங்கள் உத்தரவாதமா'? என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்