பெங்களூரு வெள்ள நிவாரண நிதியாக ரூ.300 கோடி ஒதுக்கீடு - பசவராஜ் பொம்மை

பெங்களூருவில் மழைநீர் வடிகால் அமைக்க ரூ.1,500 கோடி ஒதுக்கீடு.

Update: 2022-09-06 01:09 GMT

பெங்களூரு,

பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆள் உயரத்திற்கு மழைநீர் தேங்கியதால், பஸ்கள், கார்கள், லாரிகள் நீரில் மூழ்கின. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி பெங்களூருவில் கனமழை பெய்தது. இதனால் பெங்களூரு புறநகர் சாலை (ஓ.ஆர்.ஆர்.) வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டாகி அந்த சாலையில் அமைந்துள்ள மென்பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு வரவேண்டிய ஊழியர்கள் பணிக்கு வர முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதன் காரணமாக ஐ.டி. நிறுவனங்கள் அரசு மீது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தின. ஊழியர்கள் பணிக்கு வராததால் ரூ.250 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், வெள்ளம் ஏற்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தங்கள் நிறுவனங்களை வேறு இடத்திற்கு மாற்றிவிடுவதாகவும் அரசுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்தன.

இதுகுறித்த புலம்பல் அடங்குவதற்குள் பெங்களூருவில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட்டு சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு 130 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

பெங்களூரு வெள்ள நிவாரணத்திற்காக கர்நாடக அரசு ரூ.300 கோடியை வழங்கியுள்ளது. மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை மற்றும் வெள்ள நிலைமையை ஆய்வு செய்ய திங்கள்கிழமை இரவு மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் கூட்டம் நடந்தது.

பெங்களூரு நகர் மற்றும் புறநகரில் சாலைகள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள், பள்ளிகள் போன்ற சேதமடைந்த உள்கட்டமைப்புகளை மீட்டெடுக்க, வெள்ளச் சூழலை சமாளிக்க, ரூ.300 கோடி ரூபாய் வழங்க, அரசு முடிவு செய்துள்ளது.பெங்களூருவில் மழைநீர் வடிகால் அமைக்க ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

செப்டம்பர் 1-5 வரை, நகரின் சில பகுதிகளில் இயல்பை விட 150 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.இது கடந்த 32 ஆண்டுகளில் (1992-93) அதிக மழைப்பொழிவு ஆகும் என்று பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

கர்நாடகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி வரை மேலும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று கர்நாடக அரசுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெங்களூரு நகர் மற்றும் புறநகரில் 3 நாட்கள் 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்