மராட்டியத்தில் கர்நாடக அரசு பஸ்களுக்கு தீவைப்புகன்னட ரக்ஷனா வேதிகே அமைப்பு கண்டனம்

எல்லையில் உள்ள மாவட்டங்களை சொந்தம் கொண்டாடி மராட்டியத்துக்கு சென்ற 2 கர்நாடக அரசு பஸ்களுக்கு தீவைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதற்கு கன்னட ரக்‌ஷனா வேதிகே அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2023-09-02 18:45 GMT

உப்பள்ளி:-

மராட்டிய அரசு

கர்நாடகா-மராட்டிய எல்லையில் உள்ள கர்நாடகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களை மராட்டியம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் கர்நாடக அரசுக்கும், மராட்டிய அரசுக்கும் பிரச்சினை இருந்து வருகிறது. 

இந்த நிலையில் எல்லையில் உள்ள கர்நாடகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் மராட்டிய அரசு இடஒதுக்கீட்டை அறிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் சில பகுதிகளை மராட்டியம் சொந்தம் கொண்டாடி அறிவிப்புகளை வெளியிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் எல்லையில் உள்ள கர்நாடக மாநிலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களை சொந்தம் கொண்டாடி மராட்டியத்தில் எம்.இ.எஸ். மற்றும் மராட்டா சங்க அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போராட்டம்

அவர்கள் நடத்திய போராட்டத்தில் மராட்டியத்துக்கு சென்ற 2 கர்நாடக அரசு பஸ்கள் தீவைத்து எரிக்கப்பட்டதாகவும், அதில் 85-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது எல்லையில் உள்ள மாவட்டங்களில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இதுதொடர்பாக நேற்று தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் கன்னட ரக்ஷனா வேதிகே அமைப்பின் மாவட்ட தலைவர் மஞ்சுநாத் லோதிமட் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மராட்டியர்கள் கர்நாடக மாவட்டங்களை சொந்தம் கொண்டாடி வருகிறார்கள். மராட்டியத்துக்கு சென்ற கர்நாடக அரசு பஸ்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. அதுபோல் மராட்டியத்தில் இருந்து கர்நாடகத்துக்கு வரும் அரசு பஸ்களுக்கு நாங்கள்(கன்னட ரக்ஷனா வேதிகே அமைப்பினர்) தீவைப்போம். எங்களை போலீசார் தடுக்க கூடாது.

கண்டிக்கத்தக்கது

மராட்டியர்கள் தங்கள் எல்லையில் போராட்டம் நடத்திக் கொள்ளட்டும். அவர்களது அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு மனு கொடுக்கட்டும். ஆனால் கர்நாடக அரசு பஸ்களுக்கு தீவைத்து எரிப்பது கண்டிக்கத்தக்கது. இது கர்நாடகத்தினரை பிரச்சினைக்கு இழுப்பது போல் உள்ளது. இதை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்