கர்நாடக சட்டசபை தேர்தலில் 5 ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் 43 வேட்பாளர்கள் வெற்றி

கர்நாடக சட்டசபை தேர்தலில் 5 ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் 43 வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.

Update: 2023-05-15 20:57 GMT

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலில் 5 ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் 43 வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.

5 ஆயிரத்திற்கும் குறைவான ஓட்டுகள்

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று அபார சாதனை படைத்துள்ளது. அதேநேரத்தில் 66 தொகுதிகளில் பா.ஜனதாவும், வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஜனதாதளம் (எஸ்) கட்சியும் படுதோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 5 ஆயிரத்திற்கும் குறைவான ஓட்டுகள் வித்தியாசத்தில் 43 வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடி இருப்பது தெரியவந்துள்ளது.

5 ஆயிரம் வாக்குகள் என்பது பெரிய வித்தியாசம் இல்லை. அந்த 43 தொகுதிகளிலும் 2 கட்சிகளின் வேட்பாளர்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவி இருந்தது. இறுதியில் அந்த 43 பேரும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.ஆகி உள்ளனர். இந்த தேர்தலில் பா.ஜனதா 89 முதல் 90 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 66 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றிருந்தனர்.

23 தொகுதிகளில் பா.ஜனதா தோல்வி

பா.ஜனதா தோல்வி அடைந்த 23 தொகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தான், அந்த கட்சியின் வேட்பாளர்கள் தோல்வியை தழுவி இருந்தது தெரியவந்துள்ளது. இவற்றில் பெங்களூரு காந்திநகர் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் தினேஷ் குண்டுராவை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் சப்தகிரி கவுடா 105 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோல்வியை தழுவி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிருங்கேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராேஜகவுடா, பா.ஜனதா வேட்பாளர் ஜீவராஜிக்கு எதிராக 201 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் வெற்றி வாகை சூடி இருந்தார். இதேபோல், இந்த தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர்கள் தோல்வி அடைய அதிருப்தி வேட்பாளர் போட்டியால் வாக்குகளை பிரித்தது ஒரு காரணமாகும்.

43 வேட்பாளர்கள் வெற்றி

அதே நேரத்தில் பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரிகளான சுனில்குமார், சிவராம் ஹெப்பார், சி.சி.பட்டீல் உள்பட 17 பேர், காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சி வேட்பாளர்களை எதிர்த்து 5 ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றிருந்தனர். ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் 5 ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றிருந்தார்கள்.

ஒட்டுமொத்தமாக 3 கட்சிகளிலும் 43 வேட்பாளர்கள் 5 ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி வாகையை சூடி சட்டசபைக்குள் நுழைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்