கர்நாடக மாநில 10-வது சட்டசபை தேர்தல் கண்ணோட்டம்
கர்நாடக மாநில ௧௦-வது சட்டசபை தேர்தல் கண்ணோட்டம் குறித்து இங்கு காண்போம்.
பெங்களூரு:
கடந்த 1989-ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் சார்பில் வீரேந்திர பட்டீல் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவர் 314 நாட்கள் மட்டுமே ஆட்சி புரிந்தார். அந்த சந்தர்ப்பத்தில் அவருக்கும், கட்சி மேலிடத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி, வீரேந்திர பட்டீல் தலைமையிலான ஆட்சியை ரத்து செய்தார்.
இதையடுத்து கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அடுத்த 7 நாட்களில் காங்கிரஸ் சார்பில் பங்காரப்பா முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பங்காரப்பா 2 ஆண்டுகள் 33 நாட்கள் ஆட்சி புரிந்தார். அதையடுத்து பங்காரப்பா முதல்-மந்திரி பதவியை வீரப்ப மொய்லிக்கு விட்டுக் கொடுத்தார். வீரப்ப மொய்லி 2 ஆண்டுகள் 22 நாட்கள் முதல்-மந்திரி பதவியை அலங்கரித்தார்.
இதையடுத்து கர்நாடக சட்டசபைக்கு 1994-ம் ஆண்டு மே மாதம் தேர்தல் நடந்தது. இதில் ஜனதா கட்சி மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. கர்நாடக மாநில சட்டசபையின் 10-வது சட்டசபை தேர்தல் 26-11-1994 அன்று நடந்தது. இந்த தேர்தலில் வாக்களிக்க ஒரு கோடியே 57 லட்சத்து 11 ஆயிரத்து 580 ஆண்களும், ஒரு கோடியே 51 லட்சத்து 23 ஆயிரத்து 835 பெண்களும் என மொத்தம் 3 கோடியே 8 லட்சத்து 35 ஆயிரத்து 415 வாக்காளர்கள் தகுதியானவர்களாக இருந்தனர். இவர்கள் வாக்கு அளிக்கும் வகையில் 45 ஆயிரத்து 921 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
ஆனால் தேர்தலின் போது ஒரு கோடியே 11 லட்சத்து 87 ஆயிரத்து 933 ஆண்களும், 99 லட்சத்து 62 ஆயிரத்து 33 பெண்களும் என மொத்தம் 2 கோடியே 11 லட்சத்து 49 ஆயிரத்து 966 பேர் மட்டுமே வாக்கு அளித்தனர். இது 68.59 சதவீதமாகும். கடந்த ஆட்சியில் கூறப்பட்ட ஊழல் புகார், முதல்-மந்திரிகள் மாற்றம் ஆகியவை காரணமாக இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது. அக்கட்சி 221 தொகுதிகளில் போட்டியிட்டு 34 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. 221 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திய ஜனதாதளம் 115 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் தனிப்பெரும்பான்மையை பிடித்தது.
2234 தொகுதியில் போட்டியிட்ட பா.ஜனதா 40 இடங்களிலும், 77 தொகுதிகளில் களமிறங்கிய பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்திலும் 13 இடங்களில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒரு இடத்திலும், 4 தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. ஒரு இடத்திலும், 218 தொகுதிகளில் களமிறங்கிய கர்நாடக காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளிலும், 2 தொகுதியில் போட்டியிட்ட பி.ஆர்.பி. கட்சி ஒரு தொகுதியிலும், 2 தொகுதியில் போட்டியிட்ட இந்திய தேசிய லீக் கட்சி ஒரு தொகுதியிலும், 42 இடங்களில் போட்டியிட்ட கன்னட சலுவளி வாட்டாள் கட்சி ஒரு இடத்திலும், 88 இடங்களில் போட்டியிட்ட கர்நாடக விவசாயிகள் சங்கம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. 8 தொகுதிகளில் வேட்பாளரை நிறுத்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. 1,256 சுயேச்சை வேட்பாளர்களில் 18 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.
ஜனதாதளம் கட்சி சட்டசபை உறுப்பினர்கள் ஒன்று கூடி முதல்-மந்திரியாக எச்.டி.தேவேகவுடாவை முதல்-மந்திரியாக தேர்வு செய்தனர். அவர் 1994-ம் ஆண்டு டிசம்பர் 22-ந்தேதி கர்நாடக சட்டசபையின் 14-வது முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். பிரதமராகும் வாய்ப்பு வந்ததை தொடர்ந்து 1996-ம் ஆண்டு மே மாதம் 31-ந்தேதி முதல்-மந்திரி பதவியை தேவேகவுடா ராஜினாமா செய்தார். பின்னர் அவர் பிரதமராக பதவி ஏற்றார். இதனால் ஜே.எச்.பட்டீல் கர்நாடக முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றார். அவர் 1996-ம் ஆண்டு மே மாதம் 31-ந்தேதி முதல் 1999-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி வரை முதல்-மந்திரியாக இருந்தார்.
கடந்த 1983, 1989 ஆகிய கர்நாடக சட்டசபை தேர்தல்களில் கோலார் தங்கவயல் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு பக்தவச்சலம் வெற்றி பெற்றார். 1994-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கோலார் தங்கவயலில் பக்தவச்சலம், பெங்களூரு காந்திநகரில் பி.முனியப்பா ஆகியோர் வேட்பாளராக நிறுத்தப் பட்டனர்.
இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெறுவார் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட பக்தவச்சலம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பி.ஆர்.பி. கட்சி வேட்பாளர் ராஜேந்திரனிடம் 9,409 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். ராஜேந்திரன் 27,271 வாக்குகளும், பக்தவச்சலம் 17,862 வாக்குகளும் பெற்றிருந்தனர். இருப்பினும் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் பி.முனியப்பா 16,893 ஓட்டுகள் பெற்று வெற்றி வாகை சூடினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தயானந்தராவ் 14,227 வாக்குகள் மட்டுமே பெற்று, 2,666 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
வாட்டாள் நாகராஜின் முதல் வெற்றி
சாம்ராஜ்நகர் தொகுதி உள்பட 42 தொகுதிகளில் வாட்டாள் நாகராஜியின் கன்னட சலுவளி வாட்டாள் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அதாவது சாம்ராஜ்நகர் தொகுதியில் களமிறங்கிய வாட்டாள் நாகராஜ் 28,334 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எஸ்.புட்டசாமி 22,352 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார்.