பெங்களூரு தொகுதிகளில் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் பிறமொழி பேசும் மக்கள்
பெங்களூரு தொகுதிகளில் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் பிறமொழி பேசும் மக்கள் குறித்து இங்கு விரிவாக காண்போம்.
பெங்களூரு:
கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் கன்னடர்கள் மட்டுமின்றி வேலை, தொழில், படிப்பு விஷயமாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் பரவலாக வசித்து வருகிறார்கள். இதே நிலை மாநிலம் முழுவதும் உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இந்த புலம்பெயர்ந்த மக்கள் திகழ்கிறார்கள் என்றால் மிகையல்ல.
கல்யாண கர்நாடகாவில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கிறார்கள். பெலகாவி, நிப்பானி, கார்வார் பகுதிகளில் மராத்தி பேசும் மக்களும் அதிகளவில் உள்ளனர்.
அதுபோல் பெங்களூருவை எடுத்துக்கொண்டால் 44 சதவீத கன்னடர்கள் வசிப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. மீதமுள்ள 56 சதவீதம் பேர் பிற மொழி பேசும் மக்கள் ஆவார்கள். தற்போது பெங்களூருவில் சுமார் 20 முதல் 25 லட்சம் தமிழர்களும், 25 முதல் 30 லட்சம் தெலுங்கு பேசும் மக்களும், 4 முதல் 5 லட்சம் மலையாள மக்களும் வாழ்கிறார்கள்.
ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்களம் மற்றும் ஒட்டு மொத்த வட இந்தியர்கள் 11 முதல் 12 சதவீதம் பேர் பெங்களூருவில் வசிக்கிறார்கள். இருப்பினும் பலரிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லை. இதில் ஜெயின் சமுதாயத்தில் 80 சதவீதம் பேர் வாக்காளர்கள் அடையாள அட்டை வைத்துள்ளனர். பெங்களூரு தெற்கு குறிப்பாக பசவனகுடி என்று பார்த்தால் கன்னடர்களுக்கு அடுத்தப்படியாக ராஜஸ்தானியர்கள் அதிகமாக உள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக தமிழர்களும் வசிக்கிறார்கள். இங்கு 18 ஆயிரம் ராஜஸ்தானியர்களும், சுமார் 10 ஆயிரம் தமிழர்களும் உள்ளனர். சிக்பேட்டை, பசவனகுடி தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றிைய நிர்ணயிப்பதில், இவர்களின் பங்கு முக்கியமானது.
காந்திநகர் தொகுதியில் ராஜஸ்தானியர்கள், தமிழர்கள் அதிகளவில் உள்ளனர். இந்த தொகுதியில் எந்த வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதில் தமிழர்கள், ராஜஸ்தானிய மக்களின் வாக்குகளே தீர்மானிக்கின்றன.
பத்மநாப நகர் தொகுதியில் கம்மா நாயுடு சமுதாயத்தினர் அதிகளவில் உள்ளனர். அவர்கள் தான் அந்த தொகுதி வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிக்கும் வாக்கு வங்கியாக உள்ளனர்.
பொம்மனஹள்ளி தொகுதியில் வட இந்தியர்களும், தெலுங்கு மக்களும் அதிகளவில் உள்ளனர். மகாதேவபுராவில் சுமார் 7 லட்சம் பீகார் மக்கள் உள்பட மொத்தம் 8 லட்சத்துக்கும் அதிகமான வட இந்தியர்கள் வசிக்கிறார்கள். விஜயநகரில் 15 ஆயிரம் ராஜஸ்தானியர்கள் உள்ளனர். பேடராயனபுராவில் பீகார் மக்கள் சுமார் 30 ஆயிரம் பேர் உள்ளனர். இதுதவிர பெங்களூருவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தமிழர்கள், வட இந்தியர்கள் பரவலாக வசிக்கிறார்கள். அவர்களின் வாக்குகள் வேட்பாளர்களின் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கின்றன. இந்த கணக்கீடுகளை வைத்து தான் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆதரவு பெற தேர்தல் எனும் சதுரங்க ஆட்டத்தில் காய்களை நகர்த்தி வருகிறார்கள்.