கர்நாடகா; பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மற்றொரு பள்ளி மாணவர்
கர்நாடகாவில் ஒரு பள்ளிக்கு மற்றொரு பள்ளி மாணவர் இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் விடுத்து உள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகாவின் மேற்கு பெங்களூரு நகரில் பசவேஷ்வர் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ராஜாஜிநகர் பகுதியில் அமைந்த பள்ளிக்கூடம் ஒன்றிற்கு இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது.
அதுபற்றி பெங்களூரு மேற்கு நகர துணை காவல் ஆணையாளர் லட்சுமண் நிம்பராகி தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து அந்த பள்ளியில் இருந்த மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதனை உறுதி செய்த பின்னர், வெடிகுண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் அடங்கிய குழு ஒன்று அந்த பள்ளிக்கு சென்றுள்ளது.
இந்த சம்பவத்தில் மற்றொரு பள்ளியை சேர்ந்த மாணவர் ஒருவர், விளைவுகளை பற்றி அறியாமல் விளையாட்டாக, வெடிகுண்டு மிரட்டல் பற்றிய இ-மெயிலை அனுப்பியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுபற்றிய அறிக்கை சிறுவர் சீர்திருத்த வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதனடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என காவல் உயரதிகாரி லட்சுமண் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.