குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம்-கார்கே தொடங்கி வைக்கிறார்
கர்நாடகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்ட தொடக்க விழா நாளை (புதன்கிழமை) மைசூருவில் நடைபெறுகிறது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
பெங்களூரு:-
கிரகலட்சுமி திட்டம்
கர்நாடக அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்ட தொடக்க விழா நாளை (புதன்கிழமை) மைசூருவில் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு முதல்-மந்திரி சித்தராமையா தலைமை தாங்குகிறார். இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைக்கிறார். ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 1.08 கோடி பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து முதல்-மந்திரி சித்தராமையா மைசூருவில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், "நாங்கள் 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்துவதாக வாக்குறுதி அளித்தோம். அதில் ஏற்கனவே மூன்று திட்டங்களை அமல்படுத்திவிட்டோம். தற்போது 4-வதாக கிரகலட்சுமி திட்டத்தை மைசூருவில் தொடங்குகிறோம். மாநில அரசு இந்த திட்டத்திற்காக தற்போது ரூ.17 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. ஒவ்வொரு மாதமும் விண்ணப்பித்துள்ள பெண்களுக்கு நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்படும். மைசூருவில் நடைபெறும் விழாவில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள். " என்றார்.
கிராம பஞ்சாயத்துகள்
அனைத்து மாவட்ட, தாலுகா தலைநகரங்களிலும் இந்த திட்ட தொடக்க விழா நடக்கிறது. மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட பொறுப்பு மந்திரிகளும், தாலுகா தலைநகரங்களில் அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள். இந்த திட்ட தொடக்க விழாவை கிராம பஞ்சாயத்துகளிலும் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மக்களிடையே இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் அதன் நோக்கம் ஆகும்.