கமல்நாத் அவர்களே! நிறைய கார்களை வாங்கி குவியுங்கள்; கிண்டல் செய்த பா.ஜ.க.

காங்கிரசை விட்டு பா.ஜ.க.வில் சேர விரும்பினால் அவர்களுக்கு எனது காரை அனுப்பி வைப்பேன் என கமல்நாத் கூறிய நிலையில், அவர் நிறைய கார்களை நிச்சயம் வாங்க வேண்டும் என பா.ஜ.க. கூறியுள்ளது.

Update: 2022-09-20 11:30 GMT



போபால்,


மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் முதல்-மந்திரியான கமல்நாத் செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று பேசும்போது, காங்கிரஸ் தலைவர்கள் பலர் கட்சியில் இருந்து வெளியேறுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த கமல்நாத், காங்கிரஸ் கட்சி அழிந்துவிட்டதாக நினைக்கிறீர்கள், காங்கிரசில் இருந்து வெளியேறி பா.ஜ.க.வில் இணைய விரும்புகிறவர்கள் தாராளமாக செல்லலாம். நாங்கள் அவர்களை தடுக்க மாட்டோம். அப்படி செல்பவர்களுக்கு பா.ஜ.க.வில் நல்ல எதிர்காலம் இருக்கும் என்றால் அவர்கள் பா.ஜ.க.வில் சென்றுசேர நானே எனது காரை கடனாக தருகிறேன்.

யாரையும் சமாதானப்படுத்தி கட்சியில் தொடர வைப்பதில் நம்பிக்கையில்லை. காங்கிரசில் அனைவரும் அர்ப்பணிப்புடன் வேலை செய்கின்றனர். யார் மீதும் கட்சி எந்த அழுத்தங்களையும் தருவதில்லை என்று கூறினார்.

அவரது இந்த பேச்சுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்க்கியா மற்றும் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றி விஜய்வர்க்கியா கூறும்போது, கமல்நாத் அப்படி எண்ணினால், அவர் நிச்சயம் நிறைய கார்களை வாங்க வேண்டியிருக்கும். ஏனெனில் காங்கிரசில் இருந்து பல பெரிய தலைவர்கள் பா.ஜ.க.வில் சேர திட்டமிட்டு கொண்டிருக்கின்றனர் என கூறியுள்ளார்.

ரத்லம் நகரில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு சிவராஜ் சிங் சவுகான் பேசும்போது, தனது தொண்டர்களை மதிக்காத ஒரு கட்சி எப்படி மக்கள் நலனில் ஈடுபடும்? கட்சியின் தொண்டர்களை பற்றி பெரிய தலைவர்கள் இப்படி கூறுகிறார்கள் என்றால், தொண்டர்களை அவர்கள் எப்படி மதிக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது என கடுமையாக கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்