அறிவியல்-தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் தலைவராக கலைச்செல்வி நியமனம் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் தலைவராக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2022-08-07 18:16 GMT

புதுடெல்லி, 

நாடு முழுவதும் உள்ள 38 ஆராய்ச்சி நிறுவனங்களின் கூட்டமைப்பாக அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) செயல்படுகிறது. தன்னாட்சி பெற்ற அரசு அமைப்பான இது, நாட்டின் ஆய்வு மற்றும் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது.

இதன் தலைமை இயக்குனராக இருந்த சேகர் மாண்டே கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றார். பிறகு, உயிரி தொழில்நுட்பத்துறை செயலாளர் ராஜேஷ் கோகலே கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.

இந்நிலையில், காலியாக உள்ள சி.எஸ்.ஐ.ஆர். தலைமை இயக்குனர் பதவிக்கு நல்லதம்பி கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் நியமிக்கப்படும் முதலாவது பெண் இவரே ஆவார். அவர் தற்போது, காரைக்குடியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்.-மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

சி.எஸ்.ஐ.ஆர். தலைமை இயக்குனராக பொறுப்பேற்கும் நாளில் இருந்து 2 ஆண்டுகள் வரையோ அல்லது மறுஉத்தரவு வரும் வரையோ கலைச்செல்வி அப்பதவியில் இருப்பார்.

அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி துறையின் செயலாளராகவும் கூடுதலாக அவர் பதவி வகிப்பார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

கலைச்செல்வி, தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர். அங்குள்ள பள்ளியில் தமிழ் வழியில் படித்தார். அதுதான் கல்லூரியில் அறிவியல் கோட்பாடுகளை புரிந்துகொள்ள உதவியதாக அவர் கூறுகிறார்.

லித்தியம் அயன் பேட்டரி குறித்த ஆராய்ச்சிக்காக அவர் புகழ்பெற்றவர். 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ளார். பெரும்பாலும் மின்வேதியியல் குறித்தே ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். அவை ஆற்றல் சேமிப்பு எந்திரங்கள் வடிவமைப்புக்கு பெரிதும் பயன்பட்டு வருகிறது.

தற்போது அவர் சோடியம், லித்தியம் பேட்டரிகள் மற்றும் சூப்பர் கெப்பாசிட்டர்கள் உள்ளிட்டவற்றில் தனது ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். இந்திய அரசின் நோக்கமான மின்சார இயக்கத்துக்கான வழிமுறைகளில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

125-க்கு மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதி இருக்கிறார். 6 காப்புரிமைகளை பெற்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்