கபடி வீரர் பவன் குமார் உள்ளிட்ட 25 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி உள்பட 25 பேருக்கு அர்ஜுனா விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

Update: 2024-01-09 22:18 GMT

புதுடெல்லி,

விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் மேஜர் தயான்சந்த் கேல்ரத்னா, அர்ஜுனா விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இதன்படி 2023-ம் ஆண்டுக்கான விருது பட்டியல் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

மிக உயரிய கேல்ரத்னா விருதுக்கு ஆசிய விளையாட்டு சாம்பியனான பேட்மிண்டன் இரட்டையரில் கலக்கும் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடியும், அர்ஜுனா விருதுக்கு ஓஜாஸ் பிரவின் டியோடேல், அதிதி கோபிசந்த் சுவாமி (இருவரும் வில்வித்தை), ஸ்ரீசங்கர் (நீளம் தாண்டுதல்), பாருல் சவுத்ரி (ஓட்டப்பந்தயம்), முகமத் ஹசாமுதீன் (குத்துச்சண்டை), ஆர்.வைஷாலி (செஸ்), முகமது ஷமி (கிரிக்கெட்), அனுஷ் அகர்வாலா, திவ்ய கீர்த்தி சிங் (இருவரும் குதிரையேற்றம்), தீக்ஷா தாகர் (கோல்ப்), கிரிஷன் பஹதூர் பதாக், சுஷிலா சானு (இருவரும் ஆக்கி), பவன்குமார், ரிது நெகி (இருவரும் கபடி), நஸ் ரீன் ( கோ-கோ), பிங்கி (லான் பவுல்ஸ்), ஜஸ்வரி பிரதாப் சிங் தோமர், இஷா சிங் (இருவரும் துப்பாக்கி சுடுதல்), ஹரிந்தர் பால் சிங் சந்து (ஸ்குவாஷ்), அய்ஹிகா முகர்ஜீ (டேபிள் டென்னிஸ்), சுனில் குமார், அன்திம் பன்ஹால் (இருவரும் மல்யுத்தம்), நாரேம் ரோஷிபினா தேவி (வுசூ), ஷீத்தல் தேவி (பாரா வில்வித்தை), இல்லூரி அஜய்குமார் ரெட்டி (பார்வையற்றோர் கிரிக்கெட்), பிராச்சி யாதவ் (மாற்றுத்திறனாளிகளுக்கான சிறிய வகை படகு போட்டி) ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

இது தவிர சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா விருதுக்கு சென்னையைச் சேர்ந்த செஸ் பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷ் உள்பட 8 பேரும், தயான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு முன்னாள் கபடி வீராங்கனையும், பயிற்சியாளருமான தமிழகத்தின் கவிதா உள்பட 3 பேரும் தேர்வாகி இருந்தனர்.

இந்த நிலையில் தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. கேல் ரத்னா விருதுக்கு தேர்வாகி இருந்த சாய்ராஜ்- சிராக் ஷெட்டி ஜோடி தற்போது மலேசிய ஓபன் பேட்மிண்டனில் பங்கேற்றுள்ளதால் அவர்கள் விழாவுக்கு வரவில்லை. அவர்களுக்கு இன்னொரு நாளில் விருது வழங்கப்படும்.

இதே போல் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்ட இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையும், பாரீஸ் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றவருமான இஷா சிங் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் விளையாடி வருவதால் அவரும் வரவில்லை. மற்ற அனைவரும் விழாவில் கலந்து கொண்டு விருதுகளை பெற்றனர். அவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி பாராட்டினார். கேல்ரத்னா விருது பாராட்டு பட்டயத்துடன் ரூ.25 லட்சம் பரிசுத் தொகையை உள்ளடக்கியதாகும். அர்ஜுனா , துரோணாச்சார்யா விருதுக்கு ரூ.15 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 7 ஆட்டங்களில் ஆடி 24 விக்கெட்டுகளை கைப்பற்றி பிரமாதப்படுத்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கணுக்கால் காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். அவர் விருது வாங்க வந்த போது குழுமியிருந்த பிரமுகர்கள், விளையாட்டு பிரபலங்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். இதே போல் சமீபத்தில் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை எட்டிய தமிழக செஸ் வீராங்கனையும், பிரக்ஞானந்தாவின் சகோதரியுமான வைஷாலி, கைகள் இல்லாத நிலையில் கால்களால் அம்புகளை எய்து வில்வித்தையில் சாதிக்கும் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த வீராங்கனை ஷீத்தல் தேவி ஆகியோர் வருகை தந்த போதும் கைதட்டல் பலமாக எதிரொலித்தது.

தேசிய விளையாட்டு விருது விழா வழக்கமாக ஆக்கி ஜாம்பவான் மேஜர் தயான்சந்த் பிறந்த நாளான ஆகஸ்டு 29-ந்தேதி அன்று நடைபெறும். ஆனால் இந்த முறை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் வீரர்களின் செயல்பாட்டையும் விருது தேர்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டி இருந்ததால் விருது விழா தள்ளிவைக்கப்பட்டு தற்போது நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

மேலும் செய்திகள்