ஜார்கண்டில் 9 பஸ்கள் அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு: நாசவேலை காரணமா?

ஜார்கண்டில் 9 பஸ்கள் அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2023-06-29 20:55 GMT

ராஞ்சி,

ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள கட்கர்கா பகுதியில் தனியார் பஸ் நிறுத்துமிடம் உள்ளது. தொலைதூரங்களுக்கு செல்லும் 350-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இங்கு நிறுத்தப்பட்டு வருகின்றன.

இங்கு நிறுத்தப்பட்டிருந்த சில பஸ்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதில் 4 பஸ்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. மற்றொரு பஸ் பாதியளவு சேதம் அடைந்தது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சுமார் 100 மீ. தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மேலும் 4 பஸ்கள் சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்தன. இதில் அந்த பஸ்கள் முற்றிலும் நாசமாயின.

உயிரிழப்பு இல்லை

இது குறித்து தகவல் அறிந்ததும் அருகில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து 4 வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பஸ்கள் தீப்பிடித்தபோது அவற்றியில் பயணிகள் யாரும் இல்லாததால் இந்த சம்பவத்தில் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. அடுத்தடுத்து நடந்த சம்பவங்களில் 8 பஸ்கள் முற்றிலும் தீக்கிரையான சம்பவம் ராஞ்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. எனினும் இந்த தீ விபத்தின் பின்னணியில் சதி இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்து உள்ளனர். எனினும் விசாரணை முடிவிலேயே இது குறித்து உறுதியாக கூறப்படும் என கூறியுள்ளனர். சம்பவ இடத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் விசாரணைக்காக எடுத்துச்சென்று உள்ளனர்.

நாசவேலை காரணம்?

இதற்கிடையே பஸ்கள் தீக்கிரையான சம்பவத்தின் பின்னணியில் நாசவேலை இருக்கலாம் என ராஞ்சி பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கிருஷ்ண மோகன் சிங் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'அடுத்தடுத்து அரங்கேறிய 2 சம்பவங்களில் 8 பஸ்கள் முற்றிலும் தீக்கிரையாகி உள்ளன. ஒரு பஸ் சேதம் அடைந்து இருக்கிறது. சதிச்செயல் இல்லாமல் இது நடந்திருக்க முடியாது. இரவில் இன்னும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கக்கூடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம். இந்த சம்பவத்தை அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டு பஸ்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்' என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்