நட்பாக பழகிய 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தலையில் கல்லை போட்டு கொலை செய்த சிறுவன் கைது!
போலீஸ் விசாரணையில், நாங்கள் ஐந்து பேரும் சிறுமியை தலையில் அடித்து கொலை செய்தோம் என்று கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினர்.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், போலீசார் நான்கு இளைஞர்களை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் 15 வயது சிறுமியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது, இந்த சம்பவம் கடந்த 23ஆம் தேதி நடைபெற்றது. 5 பேர் சேர்ந்து 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். அதில் ஒருவர் 18 வயது நிரம்பாத சிறுவன் ஆவான். அந்த சிறுவன் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளான். மீதமுள்ள நால்வரும் போலீஸ்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட சிறுமியும், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். இந்த நிலையில் அந்த சிறுமி வேறொரு சிறுவனுடன் பேசி வந்துள்ளார். தன்னுடன் நெருங்கி பழகி வந்த சிறுமி இன்னொருவருடன் பழகுவது அந்த சிறுவனுக்கு பிடிக்கவில்லை. இதனை கண்டு ஆத்திரமடைந்த அந்த சிறுவன், சிறுமியை கொலை செய்ய முடிவு செய்தான்.
அதன்படி சம்பவத்தன்று, அந்த சிறுமி தன்னுடைய சகோதரியுடன் சேர்ந்து வயல்வெளிக்கு சென்றுள்ளார். அப்போது அவருடைய சகோதரி மாலை நேரம் ஆகிவிட்டதால் தனது வீட்டுக்கு திரும்பி விட்டார். இந்த நிலையில் அந்த சிறுமி மட்டும் தனியாக வயல்வெளியில் சுற்றி தெரிந்துள்ளார். இரவு வெகு நேரமாகியும் சிறுமி வீட்டுக்கு வராததால் அவருடைய குடும்பம் போலீசிடம் தகவல் தெரிவித்தது.
உடனே போலீசார் காணாமல் போன சிறுமியை தேடும் பணியை முடுக்கி விட்டனர். சிறுமியின் மொபைல் எண்ணை தொடர்பு கொண்ட போது அந்த மொபைல் அடர்ந்த வனப்பகுதிக்குள் இருப்பதாக தெரியவந்தது.
அங்கு சென்று பார்த்த போது சிறுமி தலை சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அந்த சிறுவனும் அவனுடைய கூட்டாளிகளும் சேர்ந்து அந்த சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்ததை போலீசிடம் தெரியப்படுத்தினர்.
போலீஸ் விசாரணையில், நாங்கள் ஐந்து பேரும் தலையில் அடித்து அவரை கொலை செய்தோம் என்று கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினர். தாக்க பயன்படுத்திய செங்கல் மற்றும் கற்களை போலீசார் கைப்பற்றினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விரைவில் அவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.