ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர் சி.எம்.இப்ராகிம் திடீர் ராஜினாமா

ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர் சி.எம்.இப்ராகிம் திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்து தேவேகவுடாவிடம் கடிதம் வழங்கினார்.

Update: 2023-05-24 21:59 GMT

பெங்களூரு:-

சி.எம்.இப்ராகிம்

ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தலைவராக சி.எம்.இப்ராகிம் பதவி வகித்தார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு முதல் அக்கட்சி தலைவராக இருந்து வந்தார். இவர் தலைமையில் அக்கட்சி கர்நாடக சட்டசபை தேர்தலை சந்தித்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அக்கட்சி வெற்றி பெறவில்லை. 19 இடங்களில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. அக்கட்சியின் இளைஞர் அணி தலைவரும், குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமி, ராமநகர் தொகுதியில் தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் நேற்று பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள தேவேகவுடா வீட்டுக்கு சென்றார். பின்னர் சட்டசபை தேர்தல் தோல்விக்கு ஏற்று தனது கட்சி மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, தேவேகவுடாவிடம் அவர் கடிதம் வழங்கினார்.

தோல்விக்கு நானே பொறுப்பு

பின்னர் வெளியே வந்த சி.எம்.இப்ராகிம் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-கர்நாடக சட்டசபை

தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தோல்விக்கு நானே பொறுப்பு. எனவே தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று நான் கட்சி மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். இதுதொடர்பாக ராஜினாமா கடிதத்தை தேவேகவுடாவிடம் வழங்கியுள்ளேன்.

சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி மாநிலத்தில் புதிய அரசு அமைந்துள்ளது. அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனாலும், பண பலத்தாலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. நாங்கள் ஒரு மாநில கட்சி. எங்களிடம் பண பலம் இல்லை. எங்களிடம் அதிகார பலம் இல்லை. இருப்பினும் நாங்கள் 60 லட்சம் வாக்குகளை பெற்றோம். மாவட்ட மற்றும் தாலுகா பஞ்சாயத்து தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம்.

பா.ஜனதா-காங்கிரஸ் ரகசிய கூட்டணி

புதிய முதல்-மந்திரி நலமுடன் இருக்கட்டும். அவர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைேவற்ற வேண்டும். அவர்களுக்கு 3 மாதங்கள் தேனிலவு காலம். 3 மாதத்திற்கு பிறகு அவர்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டோம். இருப்பினும் நாங்கள் தோல்வியை சந்தித்துள்ளோம். சுமார் 15 தொகுதிகளில் எங்கள் கட்சி வேட்பாளர்கள் தலா 2 ஆயிரம் ஓட்டுகளில் தோல்வியை சந்தித்தனர். ஹாசன், மண்டியா, ராமநகர் மாவட்டங்களில் பா.ஜனதா, காங்கிரசுடன் ரகசிய கூட்டணி அமைத்து எங்களை வீழ்த்தியது.

நான் காங்கிரசில் இருந்த போது எனக்கு உரிய மதிப்பு வழங்கவில்லை. இதனால் தான் அக்கட்சியில் இருந்து விலகி ஜனதாதளம் (எஸ்) கட்சியில் சேர்ந்தேன். காங்கிரசில் இருந்து இருந்தால் எனக்கு மந்திரி பதவி கிடைத்து இருக்கும். ஆனால் அக்கட்சியினர் எனக்கு கவுரம் வழங்கவில்லை. அதனால் அந்த கட்சியில் இருந்து விலகினேன். எனக்கு அதிகாரம், பதவி மீது ஆசை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்