ஜனதாதளம் (எஸ்) கட்சியின் 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் சங்கராந்தி பண்டிகைக்கு பின்பு வெளியிடப்பட உள்ளது. 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்களை அறிவிக்க வாய்ப்புள்ளது.
பெங்களூரு:-
பஞ்சரத்னா யாத்திரை
கர்நாடகத்தில் இன்னும் 4 அல்லது 5 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க ஜனதாதளம் (எஸ்) கட்சி தயாராகி வருகிறது. இதற்காக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் பஞ்சரத்னா யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த யாத்திரைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, 2-வது கட்ட பஞ்சரத்னா யாத்திரையை குமாரசாமி தொடங்கி உள்ளார். சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் விதமாக ஏற்கனவே ஜனதாதளம் (எஸ்) கட்சி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், ராமநகரில் நிகில் குமாரசாமியும், சென்னப்பட்டணாவில் குமாரசாமியும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
60 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள்
இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் 2-வது கட்டவேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் குமாரசாமி, மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, சங்கராந்தி பண்டிகைக்கு பின்பு 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற 12-ந் தேதி கலபுரகியில் பஞ்சரத்னா யாத்திரையை குமாரசாமி நிறைவு செய்ய உள்ளார். அதன்பிறகு, ஓரிரு நாட்களில் ஆலோசித்து 60 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் சிவலிங்கேகவுடா, ஏ.டி. ராமசாமி உள்ளிட்டோர் ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இருந்து விலகியே உள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தி கட்சியில் இருந்து விலகாமல் இருக்கவும், அவர்களுக்கு மீண்டும் சீட் வழங்குவதற்கான நடவடிக்கைகளில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.