ஜனார்த்தன ரெட்டி, கங்காவதி தொகுதியில் வெற்றி

கர்நாடக சட்டசபை தேர்தலில் கங்காவதி தொகுதியில் ஜனார்த்தனரெட்டி வெற்றி பெற்றுள்ளார். அவரது மனைவி மற்றும் சகோதரர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர்.

Update: 2023-05-13 22:55 GMT

பெங்களூரு:-

புதிய கட்சி தொடங்கினார்

கர்நாடகத்தில் முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதால் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு இருந்தார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே உள்ளார். பல்லாரிக்கு அவர் செல்லக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் கொப்பல் மாவட்டம் கங்காவதியில் வீடு வாங்கி ஜனார்த்தன ரெட்டி வசித்து வருகிறார். பா.ஜனதா கட்சியில் அவரை மீண்டும் சேர்க்காததால் கல்யாண ராஜ்ய பிரகதி கட்சியை தொடங்கி உள்ளார்.

அந்த கட்சி சார்பில் கல்யாண கர்நாடக மாவட்டத்தில் 14 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டு இருந்தனர். குறிப்பாக கங்காவதியில் ஜனார்த்தன ரெட்டியும், பல்லாரி மாவட்டம் டவுனில் அவரது மனைவி லட்சுமி அருணாவும் போட்டியிட்டு இருந்தனர். இதில், பல்லாரி டவுனில் ஜனார்த்தன ரெட்டியின் சகோதரர் சோமசேகர ரெட்டி பா.ஜனதா சார்பிலும், கல்யாண ராஜ்ய பிரகதி கட்சி சார்பில் லட்சுமி அருணாவும் போட்டியிட்டு இருந்தார்கள்.

ஜனார்த்தன ரெட்டி வெற்றி

இந்த நிலையில், கங்காவதி தொகுதியில் ஜனார்த்தன ரெட்டி 65 ஆயிரத்து 791 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் பல ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபைக்குள் அவர் நுழைய உள்ளார். அதே நேரத்தில் பல்லாரி டவுனில் ஜனார்த்தன ரெட்டியின் மனைவி லட்சுமி அருணாவும், அவரது சகோதரர் சோமசேகர ரெட்டியும் தோல்வி அடைந்துள்ளனர்.

லட்சுமி அருணா 48 ஆயிரத்து 118 ஓட்டுகளும், சோமசேகர ரெட்டி 36 ஆயிரத்து 751 ஓட்டுகள் வாங்கி தோல்வி அடைந்திருந்தனர். அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் 85 ஆயிரத்து 800 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சோமசேகர ரெட்டி அந்த தொகுதியில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்தார். ஜனார்த்தன ரெட்டியின் மனைவி அங்கு போட்டியிட்டதால் சோமசேகர ரெட்டி தோல்வியை தழுவ நேரிட்டுள்ளது.

மனைவி, சகோதரர்கள் தோல்வி

இதுபோல், ஜனார்த்தன ரெட்டியின் மற்றொரு சகோதரரான கருணாகர ரெட்டி பல்லாரி மாவட்டம் ஹரப்பனஹள்ளி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். அந்த தெழகுதியில் சுயேச்சை வேட்பாளரான லதா மல்லிகார்ஜூன் 69 ஆயிரத்து 152 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றிருந்தார். கருணாகரரெட்டி 55 ஆயிர்து 690 ஓட்டுகளே வாங்கி இருந்தார்.

இதன்மூலம் ஜனார்த்தன ரெட்டியின் குடும்பத்தில், அவர் மட்டுமே வெற்றி பெற்றிருந்தார். அவரது மனைவி, 2 சகோதரர்களும் தோல்வியை தழுவி இருந்தார்கள். ஜனார்த்தன ரெட்டி கட்சி சார்பில் போட்டியிட்ட மற்ற 13 பேரும் தோல்வி அடைந்ததுடன், தனது சகோதரர் தோல்விக்கு காரணமாகவும் ஜனார்த்தன ரெட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்