ஜனார்த்தன ரெட்டி மீது பதிவான வழக்கு ரத்து
பினாமி பெயரில் சொத்து சேர்த்ததாக ஜனார்த்தன ரெட்டி மீது பதிவான வழக்கை ரத்து செய்து பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
பெங்களூரு:
பினாமி பெயரில் சொத்து சேர்த்ததாக ஜனார்த்தன ரெட்டி மீது பதிவான வழக்கை ரத்து செய்து பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
மீண்டும் அரசியலில் ஜனார்த்தன ரெட்டி
கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சியின் போது மந்திரியாக இருந்தவர் ஜனார்த்தன ரெட்டி. சட்டவிரோதமாக இரும்பு தாதுக்களை வெட்டி எடுத்தது, கனிம சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி ஜனார்த்தன ரெட்டி சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர், பல்லாரி மாவட்டத்திற்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு அனுமதியுடன் அடிக்கடி அவர் தனது சொந்த மாவட்டமான பல்லாரிக்கு சென்று வருகிறார்.
அரசியலில் ஈடுபடாமல் அவர் இருந்து வந்தார். இதற்கிடையில், அடுத்த ஆண்டு(2023) நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடவும், தீவிர அரசியலில் ஈடுபடவும் ஜனார்த்தன ரெட்டி திட்டமிட்டுள்ளார். சொந்த கட்சி தொடங்கி கொப்பல் மாவட்டம் கங்காவதி தொகுதியில் அவர் போட்டியிடலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதற்காக கங்காவதியில் புதிய வீடு வாங்கி, அவர் கிரஹப்பிரவேசமும் நடத்தி உள்ளார்.
வழக்கு ரத்து
இந்த நிலையில், ஜனார்த்தன ரெட்டி தீவிர அரசியலில் ஈடுபட உதவியாக, அவர் மீது பதிவாகி இருந்த பினாமி பெயரில் சொத்து சேர்த்த வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால், உற்சாகம் அடைந்துள்ளார். அதாவது கடந்த 2009-ம் ஆண்டில் ஜனார்த்தன ரெட்டி பினாமி பெயரில் சொத்து சேர்த்திருப்பதாக வருமான வரித்துறையினர் குற்றச்சாட்டு கூறி இருந்தார்கள். பின்னர் அவரது சொத்துகளை பரிசீலனை செய்து, கடந்த 2016-ம் ஆண்டு ஜனார்த்தன ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில், 2016-ம் ஆண்டு பினாமி பெயரில் சொத்து சேர்க்கும் சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறி இருந்தது. இந்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஆதாரத்தின்படி ஜனார்த்தன ரெட்டி மீது பினாமி பெயரில் சொத்து சேர்த்திருப்பதாக பதிவான வழக்கை, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோாட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.