சிறைச்சாலைகள் சீர்திருத்த மையங்களாக பார்க்கப்பட வேண்டும்: டெல்லி ஐகோர்ட்டு

அடிப்படை உரிமைகள் என்பது காகிதத்தில் மட்டும் இன்றி, அவை வாழும் சட்டங்களாக மாறியுள்ளன என உறுதி செய்யப்படுவது நீதிமன்றங்களின் கடமை என டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்து உள்ளது.

Update: 2023-02-18 06:47 GMT



புதுடெல்லி,


டெல்லி ஐகோர்ட்டில் திகார் சிறை கைதி ஒருவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், சிறையில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்தபோது விரல்களை இழந்து படுகாயமடைந்த ஆயுள் கைதி ஒருவர், மாற்று உறுப்பு அமைப்பதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற மாநில அரசு செலவை ஏற்க உத்தவிட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு இருந்தது. அதற்கான வசதி உள்ளது என்றும் இழப்பீடு வழங்கவும் கோரப்பட்டு இருந்தது.

இதுபற்றி டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சுவர்ண காந்த சர்மா விசாரணை மேற்கொண்டு அளித்த தீர்ப்பில், குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நபரோ அல்லது ஒரு சுதந்திர குடிமகனோ வலி என்பது அவர்களுக்கு வேறுபட்டதல்ல.

சிறை கைதிகள், விசாரணை கைதிகள் அல்லது குற்றவாளிகளை பற்றி பேசும் பலர், அவர்கள் இரக்கம் காட்டப்பட வேண்டாதவர்கள் என்ற அளவிலேயே பெருமளவில் பேசப்படுகிறது. பலரின் நோக்கமும் அந்த அளவிலேயே உள்ளது.

ஆனால், குரலற்ற நபரின் குரலை கோர்ட்டு கேட்க வேண்டும். ஒரு சிறை கைதியின் வலி என்றில்லாமல் மனிதர் என்ற அளவில் உணர்ந்து, பாதிக்கப்பட்ட நபருக்கு வலிக்கான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

இந்திய அரசியல் சாசனத்தின்படி, உதவியற்ற, கைவிடப்பட்ட அல்லது ஆற்றல் சமநிலையில் இல்லாத, ஆதரவற்ற நபராக இருக்கும் மக்களுக்கு அடைக்கலம் அளிக்க கூடிய வகையில், அவர்களுக்கு உற்ற துணையாக நீதிமன்றங்கள் நிற்க வேண்டும்.

கோர்ட்டு தண்டனை வழங்கி விட்டது என்பதற்காக சமூகம் மற்றும் குடும்பத்தில் இருந்து பிரிக்கப்பட்ட சிறை கைதிகளை பொதுமக்களோ மற்றும் அவர்களது குடும்பத்தினரோ கூட கவனித்து, பார்ப்பதில்லை.

சீர்திருத்த இல்லங்களாக உள்ள சிறையில், அதிகாரிகளாக உள்ளவர்களே, கைதிகளின் பாதுகாவலர்களாக செயல்பட்டு, அவர்களது சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கும் பாதுகாவலர்களாக இருக்க வேண்டிய தருணமிது என நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

அடிப்படை உரிமைகள் என்பது காகிதத்தில் மட்டும் இருப்பதுடன் நில்லாமல், அவை வாழும் சட்டங்களாக மாறியுள்ளன என உறுதி செய்யப்படுவது நீதிமன்றங்களின் கடமை. குடிமகன்களுக்கு உதவிடவும், வழிகாட்டவும் வகையில் செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்து உள்ளார்.

அதனால் ஜனநாயகத்தில், சிறை கைதிகளின் இக்கட்டான சூழ்நிலையை கவனத்தில் கொண்டு அவர்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது மாநில அரசிடமே உள்ளது என கோர்ட்டு தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்