பசவராஜ் பொம்மையை தோற்கடித்த ஜெகதீஷ் ஷெட்டர்

1994-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பசவராஜ் பொம்மையை தோற்கடித்தவர் ஜெகதீஷ் ஷெட்டர்.

Update: 2023-04-16 20:49 GMT

பெங்களூரு:-

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான ஜெகதீஷ் ஷெட்டர், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் சீட் கிடைக்காத காரணத்தால், அக்கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். ஜெகதீஷ் ஷெட்டர் விலகியது பா.ஜனதாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அதேநேரத்தில் தனக்கு சீட் கிடைக்காமல் போனதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் காரணம் என்று ஜெகதீஷ் ஷெட்டர் குற்றச்சாட்டு கூறி வருகிறார். மேலும் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பா.ஜனதா அரசு அமைந்ததும் எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்த போது, ஜெகதீஷ் ஷெட்டர் தொழில்துறை மந்திரியாக இருந்து வந்தார். எடியூரப்பா பதவி விலகி, பசவராஜ் பொம்மை முதல்-மந்திரி ஆனதும் தனக்கு மந்திரி பதவி வேண்டாம் என்று ஜெகதீஷ் ஷெட்டர் கூறிவிட்டார்.

பசவராஜ் பொம்மை தலைமையின் கீழ் ஜெகதீஷ் ஷெட்டர் மந்திரியாக இருக்க விரும்பவில்லை என்று கூறப்பட்டது. இதற்கிடையில், ஒரே கட்சியில் இருந்தாலும், ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை இடையே மறைமுக மோதல் இருந்து வருகிறது. அதே நேரத்தில் கடந்த 1994-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், தற்போது முதல்-மந்திரியாக இருக்கும் பசவராஜ் பொம்மையை ஜெகதீஷ் ஷெட்டர் தோற்கடித்து இருந்தார். 1994-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் உப்பள்ளி புறநகர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் ஜெகதீஷ் ஷெட்டரும், ஜனதாதளம் சார்பில் பசவராஜ் பொம்மையும் போட்டியிட்டு எதிராளியாக இருந்தனர். அப்போது பசவராஜ் பொம்மையை ஜெகதீஷ் ஷெட்டர் தோற்கடித்து இருந்தார். ஜனதாதளம் கட்சியில் இருந்து பா.ஜனதாவுக்கு வந்த அவர் தற்போது முதல்-மந்திரியாக இருக்கிறார். அவரை தோற்கடித்த ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று பா.ஜனதாவில் இருந்து விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்