டிக்கெட் கிடைக்காதவா்கள் அதிருப்தி அடைவது சகஜம்; அண்ணாமலை பேட்டி
டிக்கெட் கிடைக்காதவா்கள் அதிருப்தி அடைவது சகஜம் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
பெங்களூரு:
தமிழ்நாடு பா.ஜனதா தலைவரும், கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பா.ஜனதா இணை பொறுப்பாளருமான அண்ணாமலை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான 2 வேட்பாளர் பட்டியலை எங்கள் கட்சி வெளியிட்டுள்ளது. அனைவரின் தகவல்களை சேகரித்து அதன் அடிப்படையில் கட்சி டிக்கெட் வழங்கியுள்ளது. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, கட்சி தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்து ஆலோசனை நடத்தி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
டிக்கெட் கிடைக்காதவா்கள் அதிருப்தி அடைவது சகஜம். நிறைய பேர் எதிர்பார்த்தாலும் ஒரு தொகுதியில் ஒருவருக்கு தான் டிக்கெட் வழங்க முடியும். டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு கட்சி வேறு முக்கியமான பொறுப்பு வழங்கும். இதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஜெகதீஷ் ஷெட்டர் பெரிய தலைவர். அவர் கட்சி மேலிட தலைவர்களுடன் பேசியுள்ளார்.
ஈசுவரப்பா கட்சியை வலுப்படுத்தும் பணியை செய்துள்ளார். தற்போது அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர்கள் கட்சியை வலுப்படுத்த அளித்த உழைப்பை கட்சி எப்போதும் மறக்காது. அதிருப்தியில் உள்ளவர்களை கட்சி தலைவர்கள் சமாதானப்படுத்துவார்கள்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.