பெங்களூரு முன்னேற்றம் காணும் என்று முன்கூட்டியே சிந்தித்தவர் கெம்பேகவுடா; மந்திரி பி.சி.நாகேஸ் பேச்சு
எதிர்காலத்தில் பெரிய அளவில் பெங்களூரு முன்னேற்றம் காணும் என்று முன்கூட்டியே சிந்தித்தவர் கெம்பேகவுடா என மந்திரி பி.சி.நாகேஸ் கூறினார்.
குடகு;
கெம்பேகவுடா உருவச்சிலை
பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அருகே 108 அடி உயரத்தில் கெம்பேகவுடா உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா அடுத்த மாதம்(நவம்பர்) 11-ந் தேதி நடக்கிறது. கெம்பேகவுடாவின் உருவச்சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கிடையே இச்சிலையை நிறுவுவதற்காக புனித மண் சேகரிக்கும் நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.
அதுபோல் குடகிலும் நேற்று நடைபெற்றது. குடகு மாவட்டம் மடிகேரி டவுனில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பு மந்திரி பி.சி.நாகேஸ், எம்.எல்.ஏ.க்கள் போப்பய்யா, அப்பச்சு ரஞ்சன் கொடி அசைத்து புனித மண் சேகரிக்கும் சிறப்பு வாகனத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் மந்திரி பி.சி.நாகேஸ் பேசும்போது கூறியதாவது:-
கல்வி, சுகாதாரம்
அடுத்த மாதம் 11-ந் தேதி பெங்களூரு விமான நிலையம் அருகே நிறுவப்பட்டுள்ள 108 அடி உயர கெம்பேகவுடா உருவச்சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். அந்த நிகழ்வுக்காக மாநிலம் முழுவதும் இருந்து புனித மண் சேகரிக்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்தின் முன்னேற்றத்துக்காக பலர் பாடுபட்டனர். அவர்களில் கெம்பேகவுடாவும் ஒருவர். பெங்களூரு எதிர்காலத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் காணும் என்று முன்கூட்டியே சிந்தித்த கெம்பேகவுடா பெங்களூருவின் வளர்ச்சிக்காக பல நலத்திட்டங்களை அப்போதே கொண்டு வந்தார்.
கல்வி, சுகாதாரம், தொழில், நீர் ஆதாரம் போன்ற பல அம்சங்களை இப்படி மைசூரு மன்னர் மக்களுக்காக கொண்டு வந்த நிலையில், அவரைப்போல் பெங்களூருவில் அனைத்து வசதிகளையும் கெம்பேகவுடா ஏற்படுத்தினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மண் சேகரித்தது
அதையடுத்து அந்த வாகனம் பல்வேறு இடங்களுக்கு சென்று புனித மண்ணை சேகரித்தது. இந்த நிகழ்வில் குடகு மாவட்ட கலெக்டர், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.