பலவீனமான 56 பாலங்கள் பயன்பாட்டில் இருக்கும் அவலம்

கர்நாடகத்தில் பலவீனமாக உள்ள 56 பாலங்கள் பயன்பாட்டில் இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-11-01 19:34 GMT

பெங்களூரு:

140 பேர் பலி

குஜராத் மாநிலத்தில் மோர்பி நகரத்தில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு இருந்த பழமையான தொங்கு பாலம் அறுந்து விழுந்தது. இதில் ஆற்றில் விழுந்து 140-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்திற்கு காரணம் பாலம் பழமையானது தான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள தரமற்ற பாலங்கள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதுகுறித்த செய்திகள் பின்வருமாறு:-

கர்நாடகத்தில் சாலை, ஆற்று பாலங்கள் உள்பட பல்வேறு சாலை பணிகளை கர்நாடக சாலை மேம்பாட்டு நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இந்த நிறுவனம் சேதமடைந்த பாலங்களை சீரமைப்பது, புதிதாக பாலங்கள் கட்டுவது போன்ற பணிகளை செய்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகத்தில் 56 பாலங்கள் மோசமான நிலையில் பலவீனமாக இருப்பது ஆய்வில் தெரிந்துள்ளது. ஆனாலும் அந்த பாலங்கள் இன்னும் பயன்பாட்டில் தான் உள்ளது. அவை தார்வார் மாவட்டத்தில் உள்ள உப்பினபெட்டகெரே பாலம், உத்தர கன்னடாவின் தண்டேலி, பாகல்கோட்டையின் முத்தோல், பெலகாவியின் ராமதுர்கா பாலம் உள்பட 56 பாலங்கள் ஆகும்.

கடலோர மாவட்டங்களில்...

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பாலங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அவற்றின் அடிப்படையில் பாலங்களை சரிசெய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த பாலங்களை சீரமைக்க ரூ.1,350 கோடி நிதி தேவைப்படும்.

இந்த திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்து, நிதி ஒதுக்கப்படும் பட்சத்தில் பணிகள் தொடங்கி நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். பெரும்பாலான பாலங்கள் கடலோர மாவட்டங்களான உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடாவில் உள்ளதாக அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்