கணக்குகளின் விவரங்களை வழங்க வேண்டியது டுவிட்டர் நிறுவனத்தின் கடமை; கர்நாடக ஐகோர்ட்டில் மத்திய அரசு வக்கீல் வாதம்
டுவிட்டர் கணக்குகளின் விவரங்களை வழங்க வேண்டியது டுவிட்டர் நிறுவனத்தின் கடமை என்று கர்நாடக ஐகோர்ட்டில் மத்திய அரசு வக்கீல் கூறினார்.
பெங்களூரு:
ஆபத்தான பதிவுகள்
மத்திய அரசின் மின்சாதனம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை, கடந்த 2022-ம் ஆண்டு ஆட்சேபனைக்குரிய டுவிட்டர் பதிவுகளை நீக்க டுவிட்டர் நிறுவனமே நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் டுவிட்டர் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. அதில் மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தடை விதிக்குமாறு கோரியுள்ளது. இந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த மனு நேற்று நீதிபதி கிருஷ்ண தீட்சித் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் ஆஜராகி வாதிட்டார். அவர் வாதிடுகையில் கூறியதாவது:-
சிலர் இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று பாகிஸ்தான் பெயரில் டுவிட்டர் பதிவுகளை வெளியிடுகிறாா்கள். வேறு சிலர் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தகவல் பதிவு செய்கிறார்கள். இத்தகைய பதிவுகள் நாட்டுக்கு ஆபத்தானவை. இவை வன்முறையை தூண்டிவிடும். தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 79-வது பிரிவு சில சமூக வலைதளங்களுக்கு விலக்கு அளித்துள்ளது. இதை டுவிட்டர் நிறுவனம் தனக்கு சாதகமாக எடுத்து கொள்ள முடியாது.
முடக்க வேண்டும்
மத்திய அரசின் உத்தரவுகளை டுவிட்டர் நிறுவனம் கட்டாயம் பின்பற்ற வேண்டும். எல்லா டுவிட்டர் பதிவுகளையும் அரசு கண்காணிப்பது மிக கடினம். அதனால் உதவி தேவைப்படுகிறது. டுவிட்டர் முக்கியமான சமூக வலைதள நிறுவனமாக இருப்பதால், டுவிட்டர் கணக்கு வைத்திருப்போரின் தகவல்களை அரசுக்கு வழங்க வேண்டியது அந்த நிறுவனத்தின் கடமை. ஆபத்தான டுவிட்டர் பதிவுகள் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அல்லது பொது அமைதிக்கு பங்கத்தை ஏற்படுத்தும். அத்தகைய நேரத்தில் இயற்கையாகவே மத்திய அரசு தலையிடும், பிரச்சினைக்குரிய டுவிட்டர் பதிவுகளை நீக்க வேண்டும் என்று நோட்டீசு அனுப்புவோம் அல்லது அத்தகைய டுவிட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என்று சொல்வோம்.
இவ்வாறு சங்கரநாராயணன் கூறினார்.
உரிமை கோர முடியாது
இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.
கடைசியாக கடந்த 6-ந் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, வாதிட்ட மத்திய அரசு வக்கீல், டுவிட்டர் நிறுவனம் வெளிநாட்டு நிறுவனமாக இருப்பதால், அரசியல் சாசனத்தின் 19-வது அட்டவணையின் கீழ் உரிமை கோர முடியாது என்று வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.