"காரை துரத்துவது நாய்களின் இயல்பு" - மத்திய இணைமந்திரி அஜய் மிஸ்ரா சர்ச்சை பேச்சு

ராகேஷ் திகாயத் ஒரு மதிப்பில்லாத நபர் என்று மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ரா விமர்சித்துள்ளார்.

Update: 2022-08-23 07:54 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லகிம்பூர் கேரி பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பா.ஜ.க.வினர் சென்ற கார் மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவத்தில், விவசாயிகள் 4 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து நடந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்தனர்.

இதில், மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகனான ஆஷிஷ் மிஸ்ரா சென்ற கார் மோதியதன் காரணமாகவே விவசாயிகள் உயிரிழந்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார். சமீபத்தில் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் சார்பில் அஜய் மிஸ்ராவுக்கு எதிராக 72 மணி நேர போராட்டத்தை நடத்தினார்.

இந்த நிலையில், அஜய் மிஸ்ரா லக்கிம்பூர் கேரியில் தனது ஆதரவாளர்களிடம் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அதில் அவர் பேசியிருப்பதாவது;-

"நீங்கள் என்னுடன் இருப்பதால் தான் ஊடகங்களோ, போலி விவசாயிகளோ, கனடா அல்லது பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாதிகளோ என்னை வீழ்த்த முடியாமல் திணறுகின்றனர். நாய்கள் குறைத்துக் கொண்டே இருக்கும், யானைகள் அதன் வழியில் சென்று கொண்டே இருக்கும்.

நான் லக்னோவிற்கு காரில் சென்று கொண்டிருக்கும் போது எனது காரைப் பார்த்து சாலையோரங்களில் இருக்கும் நாய்கள் குறைக்கும். அது அவற்றின் இயல்பு. அதை நான் குறை கூற மாட்டேன். ஆனால் அந்த பழக்கம் நம்மிடம் இல்லை.

காலம் வரும்போது உண்மைகள் அனைத்தும் வெளிவரும். அப்போது நான் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்வேன். உங்கள் ஆதரவு எனக்கு மிகுந்த நம்பிக்கையை தருகிறது."

இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும் ராகேஷ் திகாயத் ஒரு மதிப்பில்லாத நபர் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ராகேஷ் திகாயத், "அவரது மகன் ஒரு வருடமாக சிறையில் இருப்பதால், அவர் கோபத்தில் இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்